முதல் கட்ட தேர்தல்: மே.வங்கத்தில் 80 %, அஸ்ஸாம் 78 %, வாக்குப் பதிவு
குவஹாத்தி/ கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின. அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 78.06 சதவீத வாக்குகளும் பதிவாயின. வாக்குப் பதிவையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு இன்று முதல் மே மாதம் 16-ந் தேதி வரை பலகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு இன்றும் வரும் 11-ந் தேதியும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று முதல்கட்டமாக 65 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்டத் தேர்தலில், 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 496 பேர் ஆண்கள்; 43 பேர் பெண்கள். மொத்தம் 95,11,732 பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 45,95,712 பேர் பெண்கள். முதல்கட்டத் தேர்தலையொட்டி, 12,190 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறும் 65 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில், அக்கட்சி 54 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான அஸ்ஸாம் கணபரிஷத் கட்சி 11 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.
இந்த 65 தொகுதிகளில், முதல்வர் தருண் கோகோய் போட்டியிடும் திதாபோர், சட்டசபை சபாநாயகர் பிரணாப் கோகோய் போட்டியிடும் சிவ்சாகர், பாஜகவின் முதல்வர் வேட்பாளரான மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவால் போட்டியிடும் மஜுலி ஆகிய தொகுதிகளும் அடங்கும். இதுதவிர்த்து மத்திய முன்னாள் அமைச்சர் பபன் சிங் கடோவர், மாநில அமைச்சர்கள் கௌதம் ராய், சரத் பார்கோடாவ்கி, அஜந்தா நியோக், கோர்சிங் எங்தி, சித்திகி அகமது, பிஸ்மிதா கோகோய், சுமித்ரா பதீர், கிரீந்திர மாலிக் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய-வங்கதேச எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 48,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் 40,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 13 தொகுதிகள் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள். 18 தொகுதிகளில் மொத்தம் 133 பேர் களத்தில் இருந்தனர்.
தேர்தலுக்காக 4,945 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 1,962 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இங்கு காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரசுடன் கடந்த முறை கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை இடதுசாரிகளுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதேபோல், பாஜகவும் தனியாக போட்டியிடுகிறது.
மாவோயிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த பகுதியாக அறியப்படும் ஜங்கிள்மஹாலில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
மே.வங்கத்தில் 80 %, அஸ்ஸாம் 78 %, வாக்குகள் பதிவாகி இருந்தன.
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின. அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 78.06 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெவித்துள்ளனர்.வாக்குப் பதிவையொட்டி, இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications