ஆங்கிலத்தில் "இந்தியா.." இந்தியில் "பாரத்" இதில் புதுசா என்ன இருக்கு? ஒரே போடாக போட்ட மம்தா பானர்ஜி
கொல்கத்தா: பாரத் என்பது புதிது இல்லை என்றும் அனைவரும் சொல்லும் ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ஆனால், திடீரென பெயரை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்று மத்திய அரசை சாடியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட சர்வதேச தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு டின்னர் விருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார்.

இதற்கான அழைப்பிதழில் 'President of Bharat' என அச்சிட்டிருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் போது எல்லாம் 'President of India' என்றே அச்சிடப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருப்பதை காங்கிரஸ் உள்பட 'இந்தியா' கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அரசியல் அமைப்பில் பாரத் என்ற பெயர் இருந்தாலும் இதுவரை அந்த வார்த்தையை பெரிதும் பயன்படுத்ததாத மத்திய அரசு, தற்போது ' இந்தியா' கூட்டணிக்கு அஞ்சி பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பாரத் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இந்தியாவின் பெயரை அவர்கள் மாற்றியுள்ளார்கள். ஜி 20 மாநாட்டிற்கான இரவு டின்னர் விருந்துக்கான அழைப்பிதழலில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இந்திய அரசியல் அமைப்பு என்றும் சொல்வதுண்டு. இந்தியில், இந்தியில் 'Bharat ka Samvidhan' என்றும் சொல்கிறோம். பாரத் என்பதை நாம் அனைவரும் சொல்லும் ஒன்றுதான். இதில் புதிதாக என்ன உள்ளது? ஆனால் இந்தியா என்ற பெயரை நாம் உலகம் அறிந்தது. திடீரென பெயரை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது. நாட்டில் வரலாறு மீண்டும் எழுதப்பட்டு வருகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
