"காசு கொடுக்காம சாமி கும்பிட வருவியா..?" - ஏழைப் பெண்ணை அடித்தே கொன்ற கும்பல்..! கொடூர சம்பவம்!
கொல்கத்தா: துர்கா பூஜைக்கு சந்தா கட்டாமல் சாமி கும்பிடச் சென்றதற்காக, வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் ஒரு ஏழைப் பெண்ணை ஒரு கொடூரக் கும்பல் அடித்தே கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உலகிலேயே சுயநலமிக்க குரூரமான ஒரு உயிரினம் இருக்குமானால், அது மனிதனாக தான் இருக்கும். தனது சுயநலத்துக்காக கடவுளையும், கோயில்களையும் கூட வியாபார ஸ்தலமாக மாற்றியவன் மனிதன் தானே. அனைத்து மக்களையும் கடவுள் ஒன்றாகவே பார்ப்பதாக அனைத்து மதங்களும் சொல்கின்றன. ஆனால், சில வழிபாட்டு தலங்களுக்கு நுழைவது முதல் கடவுளை தரிசிப்பது வரை பணம் தான் பிரதானம் என்ற சூழலை மனிதர்களாகிய நாம் உருவாக்கி விட்டோம். இதனால் கடவுளுக்கு அதிக காணிக்கை கொடுப்பவருக்கு ஏகபோக மரியாதையும், பணமில்லா ஏழைகள் ஒதுக்கி வைக்கப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஏழை விதவைப் பெண்
அந்த வகையில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கான சந்தா கட்டாத ஒரே காரணத்துக்காக ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய கொடுமை நேர்ந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சனியாசிடங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுசித்ரா (45). மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான இளம் வயதிலேயே கணவரை இழந்தவர் ஆவார். தனது இரண்டு பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காகவும், அவர்களுக்கு உணவளிப்பதற்காகவும் ஏராளமான வீடுகளில் பாத்திரங்கள் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை சுசித்ரா செய்து வருகிறார்.

சந்தா கொடுக்க முடியவில்லை
இந்நிலையில், கடந்த மாதம் இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வந்து, தசரா திருவிழாவுக்கும், துர்கா பூஜைக்கும் ரூ.1,500 சந்தா கட்டுமாறு சுசித்ராவிடம் கூறியுள்ளனர். ஆனால் மாதக் கடைசி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என சுசித்ரா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள், சந்தா கட்டவில்லை என்றால் நீ ஊருக்குள் இருக்க முடியாது என்றும், கோயிலுக்கு வர முடியாது எனவும் அவர் கூறியுள்ளனர். மேலும், சுசித்ராவை தகாத வார்த்தைகளாலும் அவர்கள் திட்டியுள்ளனர்.

அடித்துக் கொலை
இந்த சூழலில், நேற்று முன்தினம் விஜயதசமி அன்று அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் நடைபெற்ற துர்கா பூஜைக்கு சுசித்ரா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் சுசித்ராவை கோயிலுக்குள் வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்காத சுசித்ரா, சாமி கும்பிடாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி கோயிலுக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த நபர்கள், சுசித்ராவை கோயிலில் இருந்து வெளியே தரதரவென இழுத்து வந்து சரமாரியாக அடித்தனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அவர்கள் காலால் மிதித்தனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து மூர்ச்சையானார். பின்னர், கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

கைது நடவடிக்கை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு விரைந்து சென்று சுசித்ராவை தாக்கிய 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர். சந்தா பணம் கட்டாத காரணத்தால் ஒரு ஏழைப் பெணை சாமி கும்பிடக் கூடாது என தடுத்து, அவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications