For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன?

By BBC News தமிழ்
|

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், கட்சிக்குள் வலுவான நிலையில் இருந்தாலும் ஒரு அமைச்சராக அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும். அவர் முன்பாக இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்துப் பேசும்போது, சாதாரண தொண்டர்களுக்குக்கூட திடீரென சட்டப்பேரவை உறுப்பினராகும் வாய்ப்பும் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைக்கும்.

வேறு கட்சிகளில் அந்த வாய்ப்பில்லை. குறிப்பாக, தி.மு.கவில் ஒருவர் கட்சிப் படிநிலைகளில் மேலேறி வர, பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள்.

ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், அமைச்சராகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரைப் பொறுத்தவரை, இந்த வளர்ச்சி அபாரமானதுதான்.

2018ஆம் ஆண்டு அறிவிப்புக்குப் பிறகு, 2019ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுகவின் மிக முக்கிய அணியான இளைஞரணியின் செயலாளராக்கப்பட்டார் உதயநிதி.

இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி, அப்போதே அமைச்சராவார் என பேசப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக்கப்படாத நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

உதயநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறை, இதற்கு முன்பு தமிழக அரசியலில் பெரிய முக்கியத்துவம் பெற்ற துறையாக கருதப்பட்டதில்லை.

திமுக உதயநிதி ஸ்டாலின்
BBC
திமுக உதயநிதி ஸ்டாலின்

ஆனால், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் அரசு, எல்லா சட்டப்பேரவை தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை திறக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

ஆகவே, பணிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல முடியும் என்பதோடு, எல்லாத் தொகுதியைச் சேர்ந்த மக்களோடும், தொண்டர்களோடும் உறவாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

ஆனால், இதையெல்லாம்விட அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்ட அமலாக்கம், பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இதுதவிர, வறுமை நீக்கம் மற்றும் கிராமப்புற கடன் ஆகிய துறைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைகளைப் பொறுத்தவரை, தனித் துறையாகச் செயல்படாமல் பல்வேறு அமைச்சகங்களிலும் திட்டங்களைச் செயல்படுத்தி, கண்காணிக்கும் துறை. பொதுவாக முதலமைச்சர்கள் வசமே உள்ள இந்தத் துறை தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டிருப்பது, அமைச்சரவையில் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் கட்சிக்குள் வெளிப்படையாக எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை.

சொல்லப்போனால், அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென மூத்த அமைச்சர்களே சொல்லும் நிலைதான் இருக்கிறது. ஊடகங்களிடம் பேசிய, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரே ஆகலாம் என்றார்.

கட்சியின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் உதயநிதிக்கு ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, தங்களது சமூகவலைதள பக்கங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்சிக்குள் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் போன்றவர்கள், உதயநிதி ஆதரவுக் குழுவின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவும் வளர்ச்சியும் குறுகிய காலத்தில் நடந்திருக்கிறது என்ற விமர்சனங்களில் உண்மையில்லாமல் இல்லை.

கடந்த 2017, 2018ல்கூட, தனது குடும்பத்திலிருந்து இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் சொல்லிவந்தார்.

அதற்கு முன்பாக பல தருணங்களில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கவே மு.க. ஸ்டாலின் தயங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லாம் மாறிப் போயிருக்கின்றன.

தமிழ்நாடு அரசு
BBC
தமிழ்நாடு அரசு

தனது 13 வயதில் 1966ஆம் ஆண்டில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பைத் துவங்கி, அரசியலில் ஈடுபட ஆரம்பித்த மு.க. ஸ்டாலின் நெருக்கடி நிலை காலத்தில் சிறைக்குச் சென்றார்.

2006ல் அவர் அமைச்சராகப் பதவியேற்றபோது, கிட்டத்தட்ட நாற்பதாண்டு கால அரசியல் அனுபவம் அவரிடம் இருந்தது.

கட்சிக்குள் நிலவரம் இம்மாதிரி இருந்தாலும் கட்சிக்கு வெளியில், குறிப்பாக பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் உதயநிதியை முன்வைத்து தி.மு.கவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

வாரிசுகளுக்கு மட்டுமே தி.மு.கவில் எதிர்காலம் உண்டு என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கின்றனர். அ.தி.மு.கவின் தலைவர்களும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு
BBC
தமிழ்நாடு அரசு

தமிழ் சினிமா உலகில் நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் என தீவிரமாகச் செயல்பட்டுவரும் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்திற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார். ஆனால், அவரது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகப் பணிகளில் ஈடுபடுமா என்பது தெரியவில்லை.

அது தொடரும் பட்சத்தில், திரைப்பட விநியோகம் தொடர்பான சிறு பிரச்னைகூட அவரது அமைச்சர் பதவியுடன் இணைத்து விமர்சிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

"இவ்வளவு விமர்சனம் இருக்கும்போது, உதயநிதி ஸ்டாலின் கடினமாக உழைக்க வேண்டும். தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. சில அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் இருக்கக்கூடும். அவர் சரியாக நடந்துகொண்டால், திமுகவின் வருங்கால முகமாக இவர் இருக்கக்கூடும்.

திமுகவில் இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று, கருணாநிதியின் கீழ் பணிபுரிந்தவர்கள். மற்றொரு தரப்பினர் முழுமையாகப் புதியவர்கள்.

அவர்களுக்கு உதயநிதியின் வளர்ச்சி பெரிய பிரச்னை கிடையாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன் ராஜசேகரன்.

ஆனால், அமைச்சரானதன் மூலமாகவே உதயநிதி தி.மு.கவின் அடுத்த தலைவர் என்பதை முடிவுசெய்துவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"உதயநிதிக்கு முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் கூர்மையாக கவனிக்கப்படுவார். அவர் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது." என்கிறார் இளங்கோவன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Udayanidhi Stalin is having many challenges ahead: Udayanidhi Stalin become 35th minister of tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X