ஓங்கி அடிக்கும் காங்கிரஸ்.. தட்டு தடுமாறும் பாஜக.. இனி வாய்ப்பே இல்லையாம்! இது சத்தீஸ்கர் கள நிலவரம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே கள நிலவரம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. நக்சல் நடமாட்டம் இருக்கும் சத்தீஸ்கரில் நவ.7 மற்றும் நவ. 17 என்று இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பதிவான வாக்குகள் டிச. 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் தேர்தல்: இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பெற 46 இடங்களில் வெல்ல வேண்டும். இதில் காங்கிரஸ் 55 முதல் 59 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரசுக்கு 30 முதல் 34 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சத்தீஸ்கர் தேர்தல் குறித்த லோக்போல் அமைப்பு வேறு சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது. சத்தீஸ்கரில் போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுக்கு இடையேதான். அங்கு வேறு சில கட்சிகள் இருந்தாலும் கூட அவை குறிப்பிட்ட பகுதிகள் அல்லது குறிப்பிட்ட சமூகத்தில் தான் செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது.
அதிருப்தி இல்லை: சத்தீஸ்கரை பொறுத்தவரை அங்கே அரிசி கொள்முதல், வனப் பகுதியில் கிடைக்கும் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஊழல், மத மாற்றம், நிறைவேற்றப்படாத மதுவிலக்கு மற்றும் வேலையின்மை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது..
அங்கே ஆட்சியில் உள்ள பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரிசிக்குக் குறைந்தபட்ச விலையாக 2800 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. இது அம்மாநில விவசாயிகளைத் திருப்திப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் 70 பேர் விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பதால்.. இது காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவாக இருக்கிறது.
பாசிட்டிவ் மனநிலை: சத்தீஸ்கரின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அங்கீகரிக்க பூபேஷ் பாகல் எடுத்து வரும் நடவடிக்கைகள் அம்மாநிலத்தின் பூர்வக்குடிகள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ததில் மத்திய அரசின் பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் செல்ல பாஜக கடுமையாக முயன்ற போதிலும் அதற்கு பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.
சிக்கல் என்ன: சத்தீஸ்கரில் மதுபானம், மகாதேவ் ஆப் மற்றும் நிலக்கரி வரி முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அது பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் இமேஜை கெடுத்துவிட்டன. அதேபோல மாநிலத்தில் மதுவிலக்கைக் காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்த முடியவில்லை. இது பெண்கள் மத்தியில் சற்று கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பாஜகவுக்குச் சற்று சாதகமாக இருந்தாலும் கூட இது பெரும்பான்மையைப் பெறும் அளவுக்கு வாக்குகளைப் பெற பாஜகவுக்கு உதவவில்லை. இதுபோன்ற சில கோபம் பூபேஷ் பாகல் அரசு மீது இருந்தாலும் கூட பெரிய அதிருப்தி எதுவும் இல்லை. இதன் காரணமாகவே சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்ல முடிவதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications