பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு - இன்று என்ன நடைபெறும்?
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழுவில் பங்குபெற வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயளாலராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்த பொதுகுழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு இன்று காலை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுக் குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வமும் பங்கு பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுக் குழுவை தடை விதிக்க கோரிய மனு
ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவிற்குத் தடைவிதிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வியாழக்கிழமை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, "பொதுக் குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட பத்துக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதற்கு பதிலளிக்கும்படி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்தனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை இரண்டேகால் மணியளவில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கிய போது முதலில் வாதிட்ட எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு, வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டது.
"ஒருபக்கம் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கருதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளது என கருதி வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காகவே இதனைப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. பொதுக் குழுவை நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடத்துவதற்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்து எடுக்க முடியும் என விதி திருத்தப்பட்டது. இந்த விதிக்கு பொதுக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் இந்த திருத்தத்திற்கு ஒப்புதல் பெறப்படவில்லை. ஆகவே, அதன் அடிப்படையில் நடந்த உடகட்சி தேர்தலும் செல்லாது. மேலும், கட்சியின் பொதுக் குழுவில் எந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது" என எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வாதிட்டனர்.
இதற்கடுத்து வாதத்தை தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, "கட்சி விதியில் திருத்தம் செய்ய பொதுக் குழுவின் ஒப்புதல் தேவையில்லை. பொதுக் குழு ஒப்புதல் வழங்காததாலேயே இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொதுக் குழுவைக் கூட்டுவதைப் பொறுத்தவரை, கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும்," என தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இரண்டே கால் மணியளவில் துவங்கிய வழக்கின் விசாரணை மாலை சுமார் ஐந்தேகால் மணிவரை நீடித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது.
வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் ஒன்பதேகால் மணிக்கு அ.தி.மு.கவின் பொதுக் குழு கூடுமென எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில் அன்று காலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=NgWY86JPVp0
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications