For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தியமூர்த்தி பவன் அடிதடி குறித்து டெல்லிக்கு ரிப்போர்ட்.. என்ன நடக்கிறது தமிழ்நாடு காங்கிரசில்?

By BBC News தமிழ்
|
What happening in Tamil Nadu Congress? Report to Delhi on TN Congress fight
BBC
What happening in Tamil Nadu Congress? Report to Delhi on TN Congress fight

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த மோதலையடுத்து கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு பக்கமாகவும் மற்ற மூத்த தலைவர்கள் மற்றொரு பக்கமாகவும் நிற்கிறார்கள்.

கே.எஸ். அழகிரியை நீக்க வேண்டுமென கட்சியின் அகில இந்தியத் தலைமையிடமும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்?

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்கில் "இந்திய ஒற்றுமைப் பயணம்" என்ற பெயரில் நீண்ட நடை பயணத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில், ஒரு வட்டாரத் தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் ஆரம்பித்த பிரச்சனையால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரண்டுபட்டு நிற்கிறது.

பிரச்னையின் அடிப்படை இதுதான்: நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருப்பவர் ரூபி மனோகரன். இந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வட்டாரத் தலைவர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடந்தபோது, மொத்தமுள்ள மூன்று வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தில் மட்டும் அவருடைய ஆதரவாளர் தேர்வானார்.

மீதமுள்ள இரண்டு வட்டாரங்களில் வேறு இருவர் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், அதிலும் தன்னுடைய ஆதரவாளர்களையே தேர்வுசெய்ய வேண்டுமென விரும்பினார் ரூபி மனோகரன். இதுதவிர, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமாரையும் நீக்க வேண்டுமென விரும்பினார் ரூபி மனோகரன். இந்த விவகாரம்தான், நவம்பர் 15ஆம் தேதியன்று சத்தியமூர்த்தி பவனில் பெரிதாக வெடித்தது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, 234 தொகுதிகளிலும் கொடிக் கம்பங்களை நடுவது ஆகியவை குறித்து விவாதிக்க கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

அங்கே கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் அவ்வப்போது கோஷம் எழுப்புவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். அந்த நிலையில், மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியின் வாகனம் உள்ளே நுழைந்தபோது, அதனை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதற்குப் பிறகு, ரூபி மனோகரன் உள்ளிட்ட சிலர் மட்டும் பேச்சு வார்த்தைக்காக உள்ளே அழைக்கப்பட்டனர். அப்போது அவரைக் கே.எஸ். அழகிரி கடுமையான வார்த்தைகளில் கடிந்துகொண்டதோடு, நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட ரூபி மனோகரனும் அவரது ஆதரவாளர்களும் வெளியில் வந்துவிட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 8 மணிக்கு முடிவடைந்த நிலையில், கே.எஸ்.அழகிரி வெளியில் செல்லும்போது, அவரை ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கிருந்த அழகிரி ஆதரவாளர்களுக்கும் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பேருக்கு காயமும் ஏற்பட்டது.

இந்த மோதல் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 77 மாவட்டத் தலைவர்களில் 62 பேர் பங்கேற்று, ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையடுத்து, வரும் 24ஆம் தேதி ரூபி மனோகரன் கே.ஆர். ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பாக ஆஜராகி நவம்பர் 15ஆம் தேதி சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென ரூபி மனோகரனிடம் கூறப்பட்டிருக்கிறது.

சத்யமூர்த்தி பவன்
BBC
சத்யமூர்த்தி பவன்

இதற்கு நடுவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகரன், தன் மீது எந்தத் தவறும் இல்லையென்றும் நியாயம் கேட்க வந்த தொண்டர்களை கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டையால் அடித்துத் துரத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

ஆனால், இதற்கு அடுத்த நாளே, ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாமென்றும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராக தன் தரப்பு விளக்கத்தை அளிக்கப்போவதாகக் கூறினார் ரூபி மனோகரன்.

ரூபி மனோகரனுக்கும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கும் இடையிலான மோதல், அழகிரிக்கும் கட்சியின் பிற தலைவர்களுக்கும் இடையிலான மோதலாக மாறியதுதான் எதிர்பாராத திருப்பம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அதாவது, நவம்பர் 15ஆம் தேதி கூட்டத்தின்போது ரூபி மனோகரனிடமும் அவரது ஆதரவாளர்களிடமும் பேசியபோது, கே.எஸ். அழகிரி பயன்படுத்திய சில வார்த்தைகள் மற்ற தலைவர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியபோது, மூத்த தலைவர்கள் யாரும் அவருடன் வரவில்லை.

இதற்கு சிறிது நேரம் கழித்து, இ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, செல்வப்பெருந்தகை ஆகியோர் தனியாக வந்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையில் கே.எஸ். அழகிரி மீது அதிருப்தியில் இருக்கும் இந்தத் தலைவர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

டெல்லியில் இந்த சந்திப்பு முடிந்த பிறகு, அங்கே என்ன பேசினார்கள் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, "நவம்பர் 15ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து தில்லியில் உள்ள கட்சித் தலைமை அறிக்கை கேட்டது.

அதனால், நான், இ.வி.கே.எஸ்., தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் சென்று கட்சித் தலைமையைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொன்னோம்" என்றார்.

என்ன கோரிக்கையை முன்வைத்தீர்கள் எனக் கோட்டபோது, "நான் சட்டமன்றத் தலைவராக இருப்பதால் அது குறித்து சொல்ல முடியாது. ஆனால், நடந்த சம்பவம் குறித்து நீதி வேண்டும் என்பதைத் தெரிவித்தோம்." என்றார்.

இந்திரா காந்தி பிறந்த நாளுக்கு கட்சித் தலைவருடன் செல்லாமல் தனியாகச் சென்றது ஏன் எனக் கேட்டபோது, "எந்த நேரத்தில் அந்த நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை எங்களிடம் சரியாகத் தெரிவிக்கவில்லை. மாற்றி மாற்றி நேரத்தைச் சொன்னார்கள்.

அதனால், நாங்கள் தனியாகச் சென்று மாலையிட வேண்டியிருந்தது" என்றார் செல்வப்பெருந்தகை. மாநிலத் தலைவரை மாற்ற வேண்டுமென அனைவரும் வலியுறுத்தினீர்களா என்பதைச் சொல்ல செல்வப்பெருந்தகை மறுத்துவிட்டார்.

கே.எஸ். அழகிரி தரப்பு இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
After the clash at Tamil nadu Congress party office last week, TN congress committee President K.S.Alagiri stands on one side and other senior leaders on the other. It is said that a complaint has been lodged with the party's all India headquarters to remove Alagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X