சிந்து நதியை நிறுத்தும் இந்தியா.. அடுத்து அந்த தண்ணீர் எங்கே போகும்? முக்கிய தகவல்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் மிகப் பெரிய சிக்கலையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதேநேரம் சிந்து பகுதிகளில் ஓடும் நீரை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் அதை இந்தியா எங்கே சேமித்து வைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
காஷ்மீரில் அப்பாவி மக்களைக் குறிவைத்து பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியா அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் போர் அல்லது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த முறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அதிரடியாக இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தான் இத்தனை காலம் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் நீங்கும்போது, அது இந்தியாவுக்கு அதிகக் கட்டுப்பாட்டைத் தருகிறது. மேலும், ஹைட்ரோ திட்டங்களையும் வேகமாக மேற்கொள்ள இது உதவுகிறது. மறுபுறம் இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியாகவே இருக்கும். விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கங்களை இது ஏற்படுத்தக்கூடும்.
சிந்து நதிகள்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளதால் இதன் கீழ் நிர்வகிக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை இந்தியா நிறுத்த வாய்ப்புள்ளது. அதேநேரம் பாகிஸ்தானுக்கு இது உடனடியாகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் கடந்த 65 ஆண்டுகளால் அமலில் இருந்த இந்த ஒப்பந்தத்தால் இந்த ஆறுகள் மீது இந்தியாவில் எந்தவொரு அணையையும் கட்ட முடியாமல் இருந்தது.
இதனால் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் முழுமையாக நிறுத்தப்படாது. அதை நிறுத்த அல்லது தடுத்து வைக்கத் தேவையான உட்கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. அதேநேரம் கிஷங்கங்கா மற்றும் ரேட்லே போன்ற நீர்த் திட்டங்களிலிருந்து வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்படலாம். இதனால் பாகிஸ்தான் விவசாயம் பாதிக்கப்படலாம்.
இந்தியாவுக்கு லாபம்
இந்தியாவுக்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் சில நன்மைகள் கிடைக்கும். 330 மெகாவாட் கிஷங்கங்கா அணை மற்றும் 850 மெகாவாட் ரேட்லே அணை போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டுமானங்களை வேகப்படுத்தலாம். ஒப்பந்தம் அமலில் இருக்கும்போது இந்தத் திட்டங்களை மேற்கொள்ளப் பல கட்டுப்பாடுகளும், பல்வேறு அனுமதிகளையும் பெற வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அதுபோல எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
ஷாபுர்கண்டி அணை (2024இல் கட்டப்பட்டது) மற்றும் திட்டமிடப்பட்ட உஜ் அணை போன்ற உள்கட்டமைப்புகள் மூலம் கிழக்கு நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் நீரையும் இந்தியா நிறுத்தலாம். முன்பே குறிப்பிட்டதுபோல அங்கு அணைகள் இல்லாததால் முழு நீர் ஓட்டத்தை நிறுத்த முடியாது. அதேநேரம் இந்த நடவடிக்கைகள் மூலம் உபரி நீரின் ஓட்டத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆண்டுக்கு 9.3 பில்லியன் கன மீட்டர் வரை தடுத்து நிறுத்த முடியும்

என்ன நடக்கும்
சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவை மிகப்பெரிய ஆறுகள். மே முதல் செப்டம்பர் வரை கோடைக் காலங்களில் இங்குள்ள மலைப்பகுதிகளில் உள்ள பனி உருகி இந்த ஆறுகளில் நீர் ஓடும். இந்த ஆறுகளில் பாக்லிஹார் மற்றும் கிஷங்கங்கா அணைகள் எனச் சில உள்கட்டமைப்பை மட்டுமே இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால், இதனால் பெரியளவில் நீரை இந்தியாவால் தேக்கி வைக்க முடியாது.. ஏனென்றால் இவை முதன்மையாக நீரைச் சேமித்து வைக்க உருவாக்கப்பட்டது இல்லை.. மாறாகப் புனல் மின் நிலையங்களுக்காகவே கட்டப்பட்டதாகும். எனவே, தற்போது உடனடியாக இந்த மேற்கு நதிகளை நம்மால் எதுவும் செய்ய முடியாது.
மறுபுறம், ஒப்பந்தத்தின் கீழ் நமக்குக் கிழக்கு ஆறுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பகுதியில் ஏற்கனவே நாம் தேவையான திட்டங்களை போட்டுள்ளோம். எனவே அந்த ஆறுகளில் இந்தியா எந்தவொரு நடவடிக்கையை எடுத்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பாகிஸ்தானுக்குக் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இந்தக் காலம் முடிந்து வறட்சி ஆரம்பிக்கும்போது தான் இந்தியாவின் ஆட்டமே ஆரம்பிக்கும். அப்போது இந்தியாவால் அதிக நீரைக் கட்டுப்படுத்த முடியும்.
நீண்ட கால திட்டம்
அதேநரம் இந்தியா ஒரு நீண்ட காலத் திட்டமாகவே கையில் எடுத்துள்ளது. ஒப்பந்தம் அமலில் இருந்த வரை இந்தியாவால் அங்கு அணைகளைக் கட்ட முடியவில்லை. புனல் மின் நிலையங்களைக் கூட நீரோட்டம் பாதிக்கப்படாமலேயே கட்ட வேண்டி இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவுக்கு இந்த ஆறுகளில் முழுமையான உரிமை கிடைத்துள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு செக் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது
இது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு நீர் டேட்டா பகிர்வதையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சிந்து நீர்களில் எவ்வளவு நீர் இருக்கிறது என்பது போன்ற தகவல்களை பாகிஸ்தானால் தெரிந்து கொள்ள முடியாது. மேலும், இந்தியாவின் புனல் மின் நிலைய திட்டங்களையும் பாகிஸ்தானால் ஆய்வு செய்ய முடியாது.
அணைகள்
கிஷன்கங்கா (ஜீலம்): 2018 முதல் செயல்பட்டு வருகின்றன.. இந்த அணை மங்களா துணை நதியிலிருந்து தண்ணீரைத் திருப்பி விடுகிறது.
ராட்லே (செனாப்): இந்த அணை கட்டப்பட்டு வருகிறது. கட்டி முடிக்கப்படும்போது இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திற்கான நீர் ஓட்டத்தை நிறுத்தும்.
ஷாபுர்கண்டி (ரவி): இதன் மூலம் ரவி நீரை இந்தியக் கால்வாய்களுக்குத் திருப்பிவிட முடியும். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு நீர் செல்வது குறையும்.
உஜ் (ரவி): இந்த அணையைக் கட்ட இந்தியா திட்டமிட்டு வந்தது. இப்போது ஒப்பந்தம் அமலில் இல்லை என்பதால் விரைவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். இந்த அணை பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை மேலும் குறைக்கும்.
அதாவது இந்தியாவின் ஒப்பந்தத்தால் நாளைய தினமே தண்ணீர் நின்றுவிடும் என பொருள் இல்லை. மாறாக நீண்ட கால நோக்கில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானை பொறுத்தவரை அவர்கள் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளை சார்ந்தே அதிகம் உள்ளனர். மின்சாரம், விவசாயம் என அனைத்திற்கும் அதுவே அடிப்படையாக இருக்கிறது.. அவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரில் பஹல்காம் என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்குச் சமீப ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 3 முதல் 5 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும் கூட தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தியா முடிவு
இதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. நேற்று இது தொடர்பாக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தையும் பிரதமர் மோடி நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்தே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியானது.












Click it and Unblock the Notifications