Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன?

Subscribe to Oneindia Tamil
இந்தியா
Getty Images
இந்தியா

கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்துவரும் நிலையில், இந்த மாநாட்டின் பின்னணி, நோக்கங்கள், இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கே. கிளாஸ்கோ நகரில் நடக்கும் இந்த காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன? இதிலிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?

ப. காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு 1995ல் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி மாநாடுகள் நடக்கின்றன. க்ளாஸ்கோ மாநாடு கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டியது. கோவிட் - 19 பரவல் காரணமாக இந்த ஆண்டு நடக்கிறது.

இந்த ஆண்டு நடக்கும் மாநாட்டிற்கு வேறு ஒரு முக்கியத்துவமும் இருக்கிறது. அதாவது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவார்கள். அதில், கார்பன் உமிழ்வு எப்படியிருக்கிறது, அதனைக் கட்டுப்படுத்துவதில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறோம் என்பதல்லாம் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். அந்த அறிக்கை இந்த ஆண்டு வெளியாகிறது. ஏற்கனவே இதுபோல ஐந்து அறிக்கைகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆறாவது அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

இந்த முறை வெளியாகியுள்ள அறிக்கையில் முதல்முறையாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளே முக்கியக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மறுதலிக்கமுடியாத அளவுக்கு அதனை நிரூபித்துவிட்டார்கள். Attribution Science பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால் இதனை செய்திருக்கிறார்கள்.

தவிர, கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்ததால், கார்பன் உமிழ்வு குறைவாக இருக்குமென கருதப்பட்டது, ஆனால், உண்மையில் கடந்த ஆண்டுகளைவிட அது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் Code Red for Humanity என்று ஐ.நாவின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான், க்ளாஸ்கோ மாநாட்டில் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்பதை உலகமே உற்றுக் கவனிக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்துத்தான் நாம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறோமா, இல்லையா, இலக்குகளை எட்டுவோமா என்பதெல்லாம் தெரியவரும்.

கே. இதற்கு முன்பு நடந்த காலநிலை மாநாடுகளில் என்னவிதமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அவையெல்லாம் எட்டப்பட்டனவா?

ப. ஆரம்பத்தில் நடந்த சில உச்சி மாநாடுகளில் கார்பன் உமிழ்வைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள். சுற்றுச்சூழலில் 350 பிபிஎம் அளவுக்குள் வைக்க வேண்டும் என்று மட்டும் கூறினார்கள். ஆனால், இன்று அதையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டோம்.

இப்போது, வெப்பநிலை அதிகரிப்புதான் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. தொழிற்புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்த சராசரி வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி செல்சியசிலிருந்து 2 டிகிரி செல்சியஸ்வரை மட்டுமே வெப்பநிலை அதிகரிக்கலாம் என பாரீஸ் உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அதைப் பல நாடுகள் ஏற்றுக்கொண்டதால், அதனைப் பாரீஸ் ஒப்பந்தம் என்றும் அழைக்கிறோம்.

ஆனால், இந்த மாநாடு முடிந்த பிறகு, 1.5 டிகிரிக்கும் 2 டிகிரிக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. ஆகவே, இதில் ஏதாவது ஓர் இலக்கைத்தான் நிர்ணயிக்க வேண்டுமென பல விஞ்ஞானிகள் கூறினர். இதையடுத்து மேலும் ஆய்வுகள் செய்ததில், தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததைவிட 1.5 டிகிரி மட்டுமே அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ஒவ்வொரு நாடும் தாங்களாக முன்வந்து தங்களால் எந்த அளவுக்கு கார்பன் உமிழ்வைக் குறைத்துக்கொள்ள முடியுமென அறிவித்தார்கள். ஆனால், அது எதையும் அந்த நாடுகள் செய்யவேயில்லை, சொன்னதோடு சரி. அப்படியே நடந்து கொண்டிருந்தாலும்கூட, 2030ல் கார்பன் உமிழ்வு 15 சதவீதம் அதிகரித்திருக்கும். இந்தப் பின்னணியில்தான் கிளாஸ்கோ மாநாடு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

கே. பாரீஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு வேறு மாநாடுகள் நடக்கவில்லையா? ஏன் இந்த க்ளாஸ்கோ மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது?

மீத்தேன்
Getty Images
மீத்தேன்

ப. அதற்குப் பிறகுதான் இன்சியான் அமைப்பிலிருந்து வெப்பநிலையை 1.5 டிகிரிக்குக் குறைக்க வேண்டுமென்ற அறிவிப்பு 2018ல் வெளியானது. உடனே மாட்ரிட்டில் ஒரு மாநாடு 2019ல் நடந்ததால், அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 2020ல் மாநாடு ஏதும் நடக்கவில்லை. அதனால், இப்போது நடக்கும் மாநாடு மிகுந்த கவனத்தைப் பெறுகிறது.

இது தவிர, Assesment Report என்றழைக்கப்படும் மதிப்பீட்டு அறிக்கையும் இந்த மாநாட்டில் வெளியாகியிருக்கிறது. எப்போதெல்லாம் இந்த ரிப்போர்ட் வெளியாகிறதோ, அப்போதெல்லாம் அந்த மாநாடுகள் முக்கியத்துவம் பெறும்.

கே. காலநிலை மாற்றம் பெரிய பேரிடர்களைக் கொண்டுவருமெனில் இந்தியா மாதிரியான நாடுகளுக்கு என்ன சவால் காத்திருக்கிறது?

ப. வரலாற்று ரீதியாக கார்பனை அதிகம் உமிழ்ந்தது மேற்குலக நாடுகள்தான். ஆகவே வரலாற்று ரீதியான பொறுப்புகளும் அவர்களுக்குத்தான் அதிகம்.

ஆனால், தற்போதைய சூழலில், கார்பனை உமிழ்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. ஐரோப்பிய யூனியனை ஒரே அலகாகக் கொண்டால், இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும்.

வரலாற்று ரீதியாக கார்பனை அதிகம் உமிழ்ந்த நாடு இந்தியா அல்ல. ஆனால், அதன் விளைவுகளை அதிகம் சந்திக்கவிருக்கும் நாடு இந்தியாதான். இப்போதே சந்திக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக, அரபிக் கடல் 52 சதவீதம் அதிக புயல்களைச் சந்திக்கும். அதனால்தான், தொடர்ந்து மேற்கு கடற்கரைப் பகுதியில் அதிக புயல்கள் கரையைக்கடக்கும் செய்திகளைக் கேட்கிறோம்.

அதேபோல, கேரளாவும் உத்தராகண்டும் மேகவெடிப்பால் மிகப் பெரிய நிலச் சரிவுகளைச் சந்தித்தன. ஆகவே, இனியும் நாம் வளர்ந்துவரும் நாடு என்று கூறி நமது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது. ஆகவேதான், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொருவிதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, கார்பன் உமிழ்வைப் பொறுத்தவரை, அமெரிக்கா 2035லேயே Net Zero என்கிற நிகர பூஜ்ஜிய அளவை எட்ட வேண்டும். இந்தியா இதனை 2060ல் எட்டினால் போதும்.

கே. இந்தியாவைப் பொறுத்தவரை கடல் மட்டம் உயர்வது தவிர வேறு என்னவிதமான பேரிடர்களை எதிர்பார்க்கலாம்?

மீத்தேன்
Getty Images
மீத்தேன்

ப. கடல் மட்டம் உயர்வது என்பது ஒரு சிக்கல்தான். குறைந்த நேரத்தில் அதிதீவிர மழைப்பொழிவு, தீவிர மழைப்பொழிவு போன்றவை தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகரிக்கும். நம்முடைய பருவமழைக் காலம் அக்டோபர் மத்தியிலிருந்து டிசம்பர் 20வரை நீடிக்கக்கூடியது. ஆனால், இனிமேல், இது மிக சில நாட்களில் நடந்து முடிந்துவிடும்.

அதேபோல, புயல்களின் தீவிரம் விரைவில் அதிகரிக்கும். ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாற 48 - 72 மணி நேரம் வரை ஆகும். ஆனால் ஒக்கி புயல், காற்றழுத்தத் தாழ்வு நிலையிலிருந்து ஆறு மணி நேரத்தில் புயலாக மாறியது. அதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தூத்துக்குடி மீனவர்களுக்கு தகவல் சொல்ல முடியவில்லை. அவர்களில் பலர் உயிரிழக்க நேரிட்டது.

மேலும், இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தால் அதைத் தேக்கிவைக்க முடியாது. இதனால் வறட்சியும் அதிகரிக்கும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் 27 சதவீத நிலப்பகுதி பாலைவனமாகி வருவதாக கூறப்படுகிறது. இதுபோக, வெப்ப மண்டல நாடுகளுக்கு காலநிலை மாற்றம் பெரும் தொற்று நோய்களைக் கொண்டுவரும். எனவே இது வெறும் சூழலியல் சிக்கல் இல்லை. மருத்துவச் சிக்கலாகவும் மாறும் என்கிறது லான்செட்டின் ஓர் அறிக்கை.

உதாரணமாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களின் வாழ்நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இப்படியாக, காலநிலை மாற்றம் தமிழ்நாட்டின் பல்வேறு அம்சங்களைப் பாதிக்கும்.

கே. ஒரு நாடு தனக்கு விதிக்கப்பட்ட காலநிலை இலக்குகளை அடையாவிட்டால், தண்டிப்பதற்கோ கண்டிப்பதற்கோ ஏதாவது வழிமுறை இருக்கிறதா?

ப. அப்படி ஒரு வழிமுறை இதுவரை இல்லை. இதுபோன்ற விஷயங்களையும் கிளாஸ்கோ மாநாட்டில் எதிர்பார்க்கிறோம். உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் காலநிலை நெருக்கடிக்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர்க நிதி கொடுப்பதாக மேற்குலக நாடுகள் கூறின. ஆனால், அதைச் செய்யவில்லை. ஆகவே, கொடுத்த வாக்குறுதிகளை நாடுகள் நிறைவேற்றுவதற்கான நெறிமுறைகளை வகுக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

கே. வளர்ந்த நாடுகள் தங்களுக்கான இலக்குகளை நிறைவேற்றுவது சரி, மாறாக இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் இலக்கை நிறைவேற்ற தொழில்துறை வளர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முடியுமா? அப்படி வளர்ச்சியைக் குறைத்தால் அதுவும் மக்களைப் பாதிக்குமே. இந்த முரண்பாட்டை எப்படி எதிர்கொள்வது?

ப. அதனால்தான், வளர்ந்த நாடுகள் குறைவான கார்பன் உமிழ்வுக்கான தொழில்நுட்பத்தை இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அளிக்க வேண்டுமென்கிறோம்.

கே. ஆனால், காலநிலை மாற்றம் என்ற ஒன்றே கிடையாது. கடல் மட்டம் உயரப்போவதில்லை என பலர் இந்தப் போக்கை புறம்தள்ளுகிறார்கள்..

ப. அது அறிவியலைப் புறம்தள்ளுவது போலத்தான். காலநிலை மாற்றத்தை பல ஆய்வுகள் உறுதிப்படுத்திவிட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+