Budget 2019: ஆமா.. அது என்ன இடைக்கால பட்ஜெட்? பொது பட்ஜெட்டிலிருந்து நிறைய வித்தியாசம் இருக்குது
Recommended Video

டெல்லி: மத்திய அரசு இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை (interim Budget) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இந்த வார்த்தையை பார்த்ததுமே, பெரும்பாலானோருக்கு தோன்றுவது, பட்ஜெட் ஓகே, அது என்ன இடைக்கால பட்ஜெட் என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால், இவ்விரு வார்த்தைகள் நடுவே மலைக்கும், மடுவிற்கும் நடுவேயான வித்தியாசம் உள்ளது.
பொதுபட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றுக்கு நடுவேயான வித்தியாசங்கள் என்ன என்பதை பார்க்கலாமா?

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன
பொது பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டின் (ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டம்), முழுமைக்குமான வரவு செலவு திட்டமாகும். ஆனால் இடைக்கால பட்ஜெட் என்பது, நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கு மட்டுமேயானது. அரசு ஊழியர்கள் சம்பளம், ஏற்கனவே ஆரம்பித்து பல துறைகளிலும் நடைபெறும் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்படுவதே இடைக்கால பட்ஜெட்டாகும்.

வரி விதிப்பில் மாற்றம் இருக்காது
வரி விதிப்பு நடைமுறையில் மாற்றம் ஏதுமின்றியே பெரும்பாலும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பதவிக்கு வந்ததும், முழு அளவிலான பட்ஜெட்டை அது தாக்கல் செய்யும். இதற்கு முன்பாக சில அரசுகள் கொள்கை முடிவுகளை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால் அந்த நடைமுறை பிறகு மாற்றிக்கொள்ளப்பட்டது.

இடைக்கால பட்ஜெட்டுக்கான தேவை என்ன?
இடைக்கால பட்ஜெட் 'ஓட் ஆன் அக்கவுண்ட்' (vote on account) என்றும் அழைக்கப்படக்கூடியது. வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் சாதாரண ஒரு வரவு செலவு திட்ட ஒப்புதலுக்காக இடைக்கால பட்ஜெட் ஏன் தாக்கல் செய்யப்பட வேண்டும்? இதற்கு காரணம், நடைபெறும் திட்டங்களுக்கு நிதி தடைபடக்கூடாது என்பதும், ஊழியர்களுக்கான ஊதியங்கள் சென்று சேர வேண்டும் என்பதுதான். மேலும், பல்வேறு மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது, அங்கீகாரம் பெற போதிய கால அவகாசம் இருக்காது என்பதால் தேர்தல் காலங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கொள்கைகள் அறிவிப்பு இல்லை
புதிய அரசு அமைந்ததும், அதன் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், பட்ஜெட் இருக்கும். எனவே, அதற்கு அவகாசம் தர வசதியாக விடைபெறும் இடத்தில் இருக்ககூடிய அரசு, எந்த கொள்கை முடிவையும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பது இல்லை. இதுபோன்ற நடைமுறை 1948ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டி காலத்தில் இருந்தே அறிமுகம் ஆகிவிட்டது. எனவே, இந்த பட்ஜெட்டில் பெரிய அளவுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications