‛புஷ்பா.. புஷ்பராஜ்’.. ஆந்திரா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? நடிகர் அல்லு அர்ஜுன் தந்த ‛நச்’ பதில்
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் அவர் எந்த கட்சிக்கு ஆதரவு? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சொன்ன பதில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் (மே 13) ம் தேதி ஆந்திராவில் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆந்திராவை ஆட்சியை செய்யும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதால் இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தான் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று ஆந்திரா தேர்தல் களம் சூடுபிடித்தது. அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்தனர். இந்நிலையில் தான் ‛புஷ்பா' பட ஹீரோவும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் இன்று நந்தியால் சட்டசபை தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியின் வீட்டுக்கு சென்றார்.
ஷில்பா ரவி ரெட்டி தற்போது நந்தியால் தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் அல்லு அர்ஜுன் தனது மனைவி ஸ்நேகா ரெட்டியுடன் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியும், அல்லு அர்ஜுனும் நண்பர்கள். இதனால் நட்பின் அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து வீட்டு பால்கனியில் நின்றபடி அல்லு அர்ஜுன் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியின் கையை உயர்த்தி ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் முன்னதாக அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவரும், மாமாவுமான பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்தார். இவர் பிதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நிலையில் வெற்றி பெற வாழ்த்துகள் என அல்லு அர்ஜுன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
அதில், ‛‛உங்களின் தேர்தல் பயணத்துக்கு வாழ்த்துகள். சேவைக்காக உங்களின் வாழ்க்கை அர்ப்பணித்துள்ளீர்கள். நீங்கள் தேர்வு செய்துள்ள பாதையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக எனது அன்பும், ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு. விரும்பும் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்'' என பவன்கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
பவன் கல்யாண் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயடுவின் தெலுங்கு தேசம் + பாஜக கூட்டணியில் உள்ளார். ஆனால் ஷில்பா ரவி ரெட்டி ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இந்நிலையில் தான் அல்லு அர்ஜுன் ஆந்திரா தேர்தலில் ஆளும் கட்சிக்கு சப்போர்ட்டா? இல்லை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான தெலுங்குதேசம் + பாஜக + பவன் கல்யாணின் ஜனசேனாவுக்கு ஆதரவா? என்ற பெரிய கேள்வி எழுந்தது.
இதுபற்றி இன்று அல்லு அர்ஜுனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஆந்திரா தேர்தலில் நான் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் எனது நண்பருக்கு மட்டுமே உதவி செய்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications