மணிப்பூர் "முனீஸ்வரன்".. நேதாஜி போட்டுத்தந்த பாதை! மணிப்பூரில் கோலோச்சும் தமிழர்கள்! தாக்கும் "குகி"
இம்பால்: மணிப்பூரில் தீவிர கலவரம் நடந்து வரும் நிலையில் அங்கே இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அங்கே ஏற்கனவே குகி பழங்குடியினர் தமிழர்களை விரும்பாத நிலையில்தான் இந்த கலவரம் தற்போது ஏற்பட்டு உள்ளது.
மணிப்பூரில் எஸ்டி இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு உள்ளது. மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினருக்கும் குகி மலைவாழ் மக்களுக்கும் இடையில் நடந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது.

அங்கே மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி பிரிவின் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக குகி பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக குகி பிரிவினர் செய்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினர் பெரும்பாலும் ஓபிசி பிரிவில் உள்ளனர். இன்னும் சிலர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து, இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்து எஸ்டி பிரிவை சேர்ந்த பழங்குடி இன மக்களான குகி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதான் அங்கு கலவரத்திற்கு காரணமாக மாறி உள்ளது.
தமிழர்கள்:
மணிப்பூரில் தீவிர கலவரம் நடந்து வரும் நிலையில் அங்கே இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அங்கே ஏற்கனவே குகி பழங்குடியினர் தமிழர்களை விரும்பாத நிலையில்தான் இந்த கலவரம் தற்போது ஏற்பட்டு உள்ளது.
இங்கே தமிழர்கள் 70 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இப்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் லட்சக்கணக்கில் வசித்து வந்தனர். அங்கே விவசாயம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வந்தனர்.
மிகவும் பணக்காரர்களாக இருந்த தமிழர்களை பர்மா ராணுவம் அங்கே ஆட்சியை பிடித்ததும் விரட்டி அடித்தது. 1962ல் அங்கே ஜெனரல் நீ வின் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களை விரட்டி அடித்தது. இதனால் 300,000 தமிழர்கள் தமிழ்நாடு திரும்பினர்.

அங்கே வசதியாக வாழ்ந்த அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அனைத்தையும் இழந்துவிட்டு தமிழ்நாடு வந்த நிலையில் சிலர் மட்டும் பெரு நம்பிக்கையோடு மீண்டும் பர்மாவிற்கு செல்ல முடிவு எடுத்தனர்.
கடல் வழியாக செல்ல முடியாது என்பதால் இவர்கள் தரை வழியாக நடந்தே சென்றனர். அதற்கு சுநத்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏ மூலம் உருவாக்கப்பட்ட பாதையில் இவர்கள் நடந்து சென்றனர். இப்போது இருக்கும் மணிப்போரின் மோரே வழியாக நிலத்தில் பயணம் செய்து அவர்கள் பர்மா சென்றனர்.
ஆனால் பர்மா எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட.. அங்கேயே மோரே பகுதியில் வசிக்க தமிழர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அங்கே வீடுகளை கட்டி வசிக்க தொடங்கிய தமிழர்கள் தற்போது மோரேவில் இருக்கும் முக்கிய இனக்குழுவாக மாறி உள்ளனர். 17 ஆயிரம் தமிழர்கள் அங்கே வசித்து வருகின்றனர்.
அங்கே விவசாயம், மர வியாபாரம் என்று பல்வேறு வியாபாரங்களை செய்து அவர்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் - மியான்மர் எல்லையில் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் தொழில்களில் கோலோச்சுவது தமிழர்கள்தான்.

கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்து மிகப்பெரிய பிஸ்னஸ் நெட்வொர்க்கை அவர்கள் அங்கே நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும் தற்போது மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டு இருக்கும் குகி பழங்குடிகளுக்கும் ஏற்கனவே வேறு விஷயத்தில் மோதல் வந்துள்ளது.
1992 ஆம் ஆண்டு வாக்கில், குகி போராளிகள் தமிழ் கடைகள், வணிகர்கள் மீது அதிக வரிகளை விதிக்க முயன்றனர். தமிழர்களை கட்டுப்படுத்தும் விதமாக குகி போராளிகள் அதிக வரி விதித்தனர். இதனால், தமிழ் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே அங்கு கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில்தான் தற்போது அதே குகி பிரிவினர் மெய்ட்டி பிரிவினர் உடன் மோதலில் ஈடுபட்டு உள்ளதால் பெரிய கலவரம் ஏற்பட்டு உள்ளது.
முனீஸ்வரன்:
மிக சமீபத்தில் கூட அங்கே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை மியான்மருக்கு மணிப்பூர் அரசு வழங்க முடிவு செய்தது. இதை தடுக்க தமிழ் சமூகம் சார்பாக சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கோவிலின் ஒரு வாயில் பகுதி மியான்மர் பகுதியில் உள்ளது.
தமிழர்கள் அவ்வளவு தூரத்தில் வாழ்ந்தாலும் தமிழ் படங்கள் பார்ப்பது, கோவில் திருவிழாக்கள் நடத்துவது, கிடா வெட்டுவது என்று தமிழ் மரபை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.
மணிப்பூரில் தீவிர கலவரம் நடந்து வரும் நிலையில் அங்கே இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications