ராமர் கோவில் போனால் கொலை மிரட்டலா? இது இஸ்லாமிய நாடு அல்ல! விளாசிய அகில இந்திய இமாம் தலைவர்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவரான இமாம் உமர் அகமது இலியாசிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். மேலும் அவர்களின் தந்திரங்களை செயல்படுத்த இது ஒன்றும் இஸ்லாமிய நாடு அல்ல. இது இந்தியா என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020ல் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து கடந்த 22ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கும்பாபிஷேக விழாவுக்கு அகில இந்திய இமாம் அமைப்புகளின் தலைவரான இமாம் உமர் அகமத் இல்யாசி பங்கேற்றார். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அவர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என கொலை மிரட்டலும் விடப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
மேலும் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இப்படி Fatwa அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது இதுதான் முதல் முறையாகும்.
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து இமாம் உமர் அகமது இல்யாசி கூறுகையில், ‛‛என்னை விரும்புபவர்கள் மற்றும் நாட்டை விரும்புபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். கும்பாபிஷேக விழாவுக்கு சென்றதால் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தான் செல்லலாம். சிலர் என்னை வெறுக்கும் சூழலை உருவாக்கி உள்ளனர். அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் மனதார என்னை அழைத்தனர். நான் பங்கேற்றேன். ஏனென்றால் எங்களின் மிகப்பெரிய மதநம்பிக்கை என்பது மனிதநேயம் தான்.
இப்போது எனக்கும், எனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால் அவர்களின் தந்திரங்களை செயல்படுத்த இது இஸ்லாமிய நாடு இல்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புவேன். அன்பின் வெளிப்பாடாக தான் நான் விழாவுக்கு சென்றேன். இதில் தவறு எதுவும் இல்லை. நான் எனது பொறுப்பை ராஜினாமா செய்யமாட்டேன். இங்குள்ள சகோதரத்துவ மனப்பான்மை, அன்பை காட்டும் விதம் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கு தான் செல்ல வேண்டும்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications