ஹேமந்த் சோரனின் மனைவியை பின்னுக்கு தள்ளி ஜார்கண்ட் முதல்வராகும் சாம்பை சோரன்! யார் இவர் தெரியுமா
ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநில அரசியலில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஹேமந்த் சோரனிடம் நில சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் அவரிடம் பலமுறை அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் இன்று
ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பதவிக்கு ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் முன்னிலையில் இருந்தது. ஆனால் எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது கல்பனா சோரனை விட சாம்பை சோரனுக்கு தான் அதிகம் இருந்தது. இதனால் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஹேமந்த் சோரன் கைதாகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சாம்பை சோரன் ஆளுநரை சந்தித்து முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக தேர்வாகி உள்ள சாம்பை சோரன் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது முதல்வராக தேர்வாகி உள்ள சாம்பை சோரன், தற்போதைய ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் சாராய்கேலா கார்சவான் மாவட்டத்தின் ஜலின்கோட்டா கிராமத்தை சேர்ந்த சிமால் சோரன் என்ற விவசாயியின் மூத்த மகன். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்து வந்தார். 10ம் வகுப்பு வரை அரசு பள்ளி வரை படித்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், 3 மகள்கள் பிறந்தனர். 90ஸ் காலத்தில் ஜார்கண்ட் புதிய மாநிலமாக உருவாக வேண்டும் என்ற சாம்பை சோரன், ஷிபு சோரனுடன் இணைந்து ஜார்கண்ட் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி போராடிய ஜார்கண்ட் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அவர் ‛ஜார்கண்ட் புலி' என்ற பெயரை பெற்றார். இதன்மூலம் அரசியலுக்குள் நுழைந்த சாம்பை சோரன் சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
அதன்பிறகு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். இவர் முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியும் பல்வேறு துறை அமைச்சராக செயல்பட்டார். இப்போதைய காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications