Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தர பிரதேசம்.. 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. யோகிக்கு அக்னி பரிட்சை! கள நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: உபியில் நடைபெற உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது? இந்தத் தொகுதிகள் ஏற்கெனவே எந்தக் கட்சியிடம் இருந்தன? யோகி ஆதித்யநாத் இந்தச் சவாலை எதிர்கொண்டு பாஜகவுக்கு வெற்றிக்கனியைப் பெற்றுத் தருவாரா?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலில் உபியில் படுதோல்வியைச் சந்தித்தது. மொத்தம் 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த 2019இல் 62 இடங்களில் வென்றிருந்த இந்தக் கட்சி இந்த முறை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அதுவும் பாஜக பலம் அதிகம் உள்ளதாக நம்பப்பட்டு வந்த உபியில் ஏற்பட்ட இந்தத் தோல்வியால், மோடி கூட்டணி பலத்துடன் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

Uttar Pradesh Yogi Adityanath

கடந்த 2019இல் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி இந்த முறை 37 இடங்களைக் கைப்பற்றியதுடன் நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்குக் காரணம் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணிதான். இந்த முறை காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில்தான் பல்வேறு காரணங்களால் உபி சட்டசபையில் காலியாக உள்ள 10 சட்டசபை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தல் 2027இல் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக அமையும் எனப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். கூடவே இந்த வெற்றியில் யோகியின் கவுரவமும் கலந்துள்ளது என்று பாஜகவினர் நம்பி வருகின்றனர். ஏற்கெனவே யோகியின் அதிகாரத்தைப் பறிக்கத் துணை முதல்வர் பல முயற்சிகளைச் செய்து வருகிறார். இடைத்தேர்தல் தோல்வியும் தலையில் விழுந்தால், யோகியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே இடைத்தேர்தல் குறித்து வியூகம் அமைக்க அமைச்சர்களுடன் ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அமைச்சர்கள் தொகுதிகளுக்குச் சென்று, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களோடு கூடி விவாதித்து, பிரச்சினைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து உடனடியாக குறைகள் இருந்தால் அதைச் சரிசெய்யுமாறு யோகி உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அரசின் செயல்பாடுகள் மீது கூட்டணிக் கட்சிகளே குழப்பத்தில் உள்ளன. அப்னா தள் (சோனேலால்) தலைவரும், மத்திய அமைச்சருமான அனுப்ரியா படேல் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு ஒபிசி வகுப்பினருக்குக் கிடைக்கவில்லை எனப் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். கூடவே ​​நிஷாத் கட்சித் தலைவர் சஞ்சய் நிஷாத், லோக்சபா தேர்தல் தோல்விக்கு புல்டோசர் ராஜ் தான் காரணம் குற்றம் சாட்டினார்.

"அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி ஏழைகளின் வீடுகளைக் கேட்க கேள்வி இல்லாமல் இடித்தனர். அதுவே பாஜகவுக்கு எதிராக மக்களை அணிதிரள வைத்தது" என்று கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார். இடைத்தேர்தலிலும் சமாஜ்வாதி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கூடவே இடைத் தேர்தல் நடக்க உள்ள 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகப் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. ஆகவே மும்முனை போட்டி மீண்டும் உருவாகியுள்ளது. பிஎஸ்பி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என விலகி இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தலில் தலித் வாக்குகள் இந்தியா அணிக்கு மாறியதால் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஆகாஷ் ஆனந்த் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பார் என்று கடந்த ஜூன் மாதமே மாயாவதி அறிவித்துவிட்டார். முன்பு கர்ஹால், கதேஹ்ரி, குந்தர்கி, கைர், மஞ்ச்வா, மீராபூர், மில்கிபூர், புல்பூர் காசியாபாத் சதார் என மொத்தம் 9 தொகுதிகள் காலியாக இருந்தன. கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற எஸ்பி எம்எல்ஏ இர்பான் சோலங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசாமாவ் தொகுதி கூடுதலாக சேர்ந்தது.

Uttar Pradesh Yogi Adityanath

2022 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி கர்ஹால், கதேரி, குந்தர்கி, மில்கிபூர், சிசாமாவ் ஆகிய ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது. கைர், புல்பூர், காசியாபாத் சதார் ஆகிய மூன்று இடங்களில் பாஜக வென்றது., ஆர்.எல்.டி மீராபூரில் வெற்றி பெற்றது. நிஷாத் கட்சி மஞ்சவா தொகுதியைக் கைப்பற்றியது.

இந்நிலையில்தான் இப்போது மீண்டும் இடைத்தேர்தலை இந்தத் தொகுதிகள் சந்திக்க உள்ளன. இப்போது நடக்க உள்ள தேர்தலில் எந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கர்ஹல்: இந்தத் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான கர்ஹால் மெயின்புரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த 2022 இல் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எஸ்பி சிங் பாகேலை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993 இல் இருந்து இங்கே எஸ்பி வெற்றி பெற்று வருகிறது.

கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் நின்று அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே இந்தத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சமாஜ்வாதி கட்சி நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கத்தேரி: ஒரு காலத்தில் பிஎஸ்பி கோட்டையாக இருந்த அம்பேத்கர் நகரில் உள்ளது கத்தேரி. தலித் அரசியல் ஆய்வுக்கூடமாக இத்தொகுதி கருதப்பட்டது. பிஎஸ்பி முன்னாள் அமைச்சர் லால்ஜி வர்மா 2021 இல் சமாஜ்வாதிக்கு மாறினார். அதன்பிறகு, இங்கே அரசியல் சூழல் மாறியது. 2022இல் எஸ்பி வேட்பாளர் வர்மா வெற்றிபெற்றார்.

அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொகுதியும் காலியானது. ஆகவே வர்மா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது ஒபிசி பிரதிநிதி ஒருவரையோ இங்கே நிறுத்த அகிலேஷ் முடிவு செய்துள்ளார். இங்கே பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும் பலமாக உள்ளதால் போட்டி மும்முனையாக மாற உள்ளது.

மில்கிபூர்: அயோத்தி மாவட்டத்தில் உள்ளது இத்தொகுதி. பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை, எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற அவதேஷ் பிரசாத்தான் இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்துவந்தார். எம்பி ஆனதால் தொகுதி காலியானது. ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்து வந்த இந்தக் கோட்டையை அவதேஷ் பிரசாத் பொடிப்பொடியாக உடைத்து காட்டினார். இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து மில்கிபூரை தொகுதியைக் கைப்பற்ற பாஜக கடும் போட்டு வருகிறது. இது அக்கட்சியின் கவுரவ பிரச்சினையாக மாறியுள்ளது.

மஞ்ச்வா: நிஷாத் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவான வினோத் குமார் பிந்த், பாதோஹி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச்வா தொகுதி காலியானது. 2002, 2007, 2012 தேர்தல்களில் மஞ்ச்வா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியே வெற்றி பெற்றது. 2017இல் பாஜக இதைக் கைப்பற்றியது.

புல்பூர்: பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள புல்பூர் தொகுதி. புல்பூர் மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ பர்வீன் படேல், சமாஜ்வாதி வேட்பாளர் அமர்நாத் மவுரியாவை தோற்கடித்து வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இது காலியானது. இங்கே ஓபிசி வாக்குப்பினர் அதிகம். ஆகவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எஸ்பி மற்றும்பிஜேபி இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

சிசாமாவ்: கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் தொகுதி. கிரிமினல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து தொகுதி காலியானது. 2012, 2017, 2022 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் சோலங்கிதான் இங்கே வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் கான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, சமாஜ்வாதியிடமிருந்து சிசாமாவ் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக உள்ளது. முஸ்லீம்-ஓபிசி வாக்குகளை ஒன்று திரட்டுவதன் மூலம் தொகுதியை தக்கவைக்க எஸ்பி திட்டம் வகுத்து வருகிறது.

குந்தர்கி: சமாஜ்வாதி கோட்டையாகக் கருதப்படும், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ளது குந்தர்கி தொகுதி. சம்பல் தொகுதியிலிருந்து மக்களவைக்கு எஸ்பி எம்எல்ஏ ஜியா-உர் ரஹ்மான் பார்க் தேர்வானதையடுத்து இது காலியானது. இங்கே பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில யூகங்கள் நிலவி வருகின்றன.

கைர்: ஹத்ராஸ் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாஜக எம்எல்ஏ அனூப் பிரதான் வால்மீகி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அலிகார் மாவட்டத்தில் உள்ள கைர் சட்டமன்றத் தொகுதி காலியானது. தலித்துகளுடன், ஜாட் வகுப்பினரும் இங்கே அதிகம் வசித்துவருகின்றனர். ஆர்எல்டி ஆதரவுடன் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது. இங்கே காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காசியாபாத் சதர்: காசியாபாத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு சிட்டிங் எம்எல்ஏ அதுல் கர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காசியாபாத் சதார் சட்டமன்றத் தொகுதி காலியானது. இது பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இடைத்தேர்தலில் தொகுதியை மறுபடியும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்து வருகிறது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை இங்கே நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது.

மீராப்பூர்: பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் உள்ள 5 சட்டமன்றப் பிரிவுகளில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராபூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. பிஜ்னோர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்எல்டி எம்எல்ஏ சந்தன் சவுஹானால் இந்த இடம் காலியானது. இடைத்தேர்தலில் அது ஆர்எல்டிக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள அகிலேஷ் யாதவ் மீராபூரை ஆர்எல்டியிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+