கொல்கத்தா மருத்துவர் கூட்டு பலாத்காரம்? முக்கிய ஆதாரமாக மாறும் டிஎன்ஏ முடிவுகள்! அதிர வைக்கும் தகவல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சிபிஐ அதிகாரிகள் இப்போது டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்டும் நேரடியாக விசாரணைக்கு எடுத்துள்ளது.
டிஎன்ஏ சோதனை: இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் கைதாகியுள்ள நபரிடம் எடுத்த டிஎன்ஏ மாதிரிகள் இப்போது சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் முடிவுகள் ரொம்பவே முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக இந்தச் சம்பவத்தில் கைதான நபரைத் தாண்டி மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்டு வருகிறது. கைதான அந்த சஞ்சய் ராயின் மாமியார் கூட, இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றே கூறியிருந்தார்.
குற்றவாளி: மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் குற்றம் நடந்த நாளன்று அதிகாலை 4 மணியளவில் சஞ்சய் எமெர்ஜென்சி பிளாக்கில் நுழைவது பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்தே போலீசார் அவரை கைது செய்திருந்தனர். மேலும், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு புளூடூத் ஹெட்செட் இருந்தது. அது சஞ்சய் ராய் செல்போனுடன்தான் கனெக்ட் ஆகி இருந்தது. இதுவும் முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், இதில் சஞ்சய் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
கூட்டுப் பலாத்காரமா: இதன் காரணமாகவே டிஎன்ஏ சோதனை ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குற்றச் சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபட்டாரா இல்லை வேறு பலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பது இந்த டிஎன்ஏ சோதனையில் தெளிவாகத் தெரிய வரும். அதில் சஞ்சய் தவிர மற்றவர்களின் டிஎன்ஏ இல்லை என்றால் இது கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்.
இந்த கேஸில் டிஎன்ஏ டெஸ்டிங் முக்கியமாக இருக்கும் அதேநேரம் சஞ்சய் ராய்க்கு உளவியல் பரிசோதனையும், உண்மையைக் கண்டறியும் சோதனையும் நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ ஏற்கனவே மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பிவிட்டனர். இன்னும் சில நாட்களில் இந்த சோதனை முடிவுகள் கிடைத்துவிடும். அது இணையத்தில் பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
இணையத்தில் பரவிய தகவல்: கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடலில் பல எலும்பு முறிவுகள் இருந்ததாகவும் 150 மில்லிகிராம் விந்து இருந்ததாகவும் இணையத்தில் தகவல்கள் பரவின. இருப்பினும், இதைக் கொல்கத்தா போலீசார் மறுத்தனர்.
அவர்கள் கூறுகையில், "150 கிராம் விந்து இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லை.. இந்த மாதிரியான தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை. இவை சமூக வலைத்தளங்களில் பரவி தேவையில்லாத குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்துகிறது" என்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications