"பாகிஸ்தானில் பெண்கள் கல்லறைக்கு பூட்டு.." பலாத்காரம் என பரவிய தகவல்.. உண்மை என்ன!
ஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் திடீரென பெண்கள் கல்லறைகளில் திடீரென பூட்டுகளைப் போட்டு வைக்கிறார்கள். இந்த படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இது குறித்து உண்மையைப் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது.

இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்கே பிரதமராக இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
பாகிஸ்தான்: இது ஒரு பக்கம் இருக்க அங்கே பல ஷாக் சம்பவங்களும் நடந்து வருகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது அங்கே நடந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பல கல்லறைகளில் பூட்டுப் போட்டு வைக்கும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், சிலர் இது குறித்துப் பல கருத்துகளைப் பதிவிட்டனர்.
அதாவது பாகிஸ்தான் பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களைக் கூட பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாகக் கல்லறைக்கும் பூட்டுப் போட்டு வைக்க வேண்டி இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. பாகிஸ்தான் நாட்டில் பிணத்துடன் பாலியல் உறவு கொள்ளும் நெக்ரோபிலியா கேஸ்கள் அதிகரித்துள்ளதே பெற்றோர்கள் இதுபோல செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் என்றும் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாகக் கூறிக் கொண்டாலும் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் இணையத்தில் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
வக்கிர எண்ணம் கொண்ட சிலர் தங்கள் இச்சையைத் தணிக்க இறந்த உடல்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்றும் பாகிஸ்தானில் பரவலாக அதிகரிக்கும் இந்த நெக்ரோபிலியாவை கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற இப்படி கல்லறைக்கும் பூட்டை போட்டு வைக்கிறார்கள் என்றும் பலரும் தெரிவித்தனர். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியான. இருப்பினும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது
இது குறித்த செய்திகளைப் பல ஊடகங்களும் வெளியிட்டன.. இதனிடையே உண்மையில் அங்கே எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களை அல்ட் நியூஸ் நிறுவனர் முகமது சுபைர் பகிர்ந்துள்ளார். அதாவது இது தொடர்பான படங்கள் பாகிஸ்தானில் கடந்த 24ஆம் தேதி முதலே டிரெண்டாகி வருகிறது. அப்போது பலாத்காரத்தைத் தடுக்க இதுபோல கதவுகளை அமைத்துப் பூட்டுவதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது இணையத்தில் வெளியான சில நாட்களுக்குப் பின்னரே பலாத்காரத்தைத் தடுக்க என்ற பேச்சே வந்துள்ளது. இந்த படங்களை எடுத்த சிலரிடமும் முகமது சுபைர் பேசியுள்ளார். சிலர் மூடநம்பிக்கை காரணமாகவே இப்படிச் செய்வதாகவும் மற்ற தகவல்கள் எதிலும் உண்மை இல்லை என்றே அவர்களும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பலாத்காரத்திற்குப் பயந்து கல்லறைகளைப் பூட்டி வைப்பதாகப் பரவும் தகவல்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
