அடுத்து ஜெயலலிதா வரப் போறாரே!.. சோகத்தில் ஆழ்ந்த வாஜ்பாய்.. ஒரு பிளாஷ்பேக்!!
மும்பை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நேரத்தில் அவுட்லுக் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா ஒரு பிளாஷ்பேக் கட்டுரை எழுதியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.
நமது தமிழ் வாசகர்களுக்காக அதிலிருந்து சில பகுதிகள்...

வாஜ்பாய்க்கு பாரதரத்னா
சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அதில் பேசிய அத்தனை பேருமே வாஜ்பாய்க்கு பாரதரத்னா தர வேண்டும் என்று ஒரே குரலில் வலியுறுத்தினார்கள். நான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த ஒரே குரல்.

ஆனால் நான் ஏன் எதிர்த்தேன்
நான் அவுட்லுக்கில் பணியாற்றியபோது, 2001ம் ஆண்டு மே மாதம் ஒரு மிகப் பெரிய வருமான வரி சோதனை நடந்தது. அவுட்லுக் எடிட்டரின் வீட்டில்தான் அந்த ரெய்டு நடந்தது. அந்த ரெய்டை, சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய ரெய்டு என்று இந்துஸ்தான் டைம்ஸ் வர்ணித்திருந்தது.

வாஜ்பாய் அலுவலக முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால்
அப்போது பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். பிரதமர் அலுவலகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளை அவுட்லுக் அப்போது தொடர் கட்டுரைகளாக அம்பலப்படுத்தி வந்தது.

வாஜ்பாய் மருமகன் முதல் பிரிஜேஷ் மிஸ்ரா வரை
வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டசார்யா, மறைந்த பிரிஜேஷ் மிஸ்ரா, அதிகாரி என்.கே.சிங் ஆகியோர் மீதுதான் பல குற்றச்சாட்டுக்கள்.

பெரும் சோதனையை சந்தித்த ராஜன் ரஹேஜா
அவுட்லுக் உரிமையாளரான ராஜன் ரஹேஜா அப்போது சந்தித்த சோதனைகளை சில வரிகளில் சொல்லி விட முடியாது. அப்படி பல சோதனைகளைச் சந்தித்தார் அவர்.

40 வருட பத்திரிக்கையுலக வாழ்க்கையில்
எனது 40 வருட பத்திரிக்கையுலக வாழ்க்கையில் இப்படி ஒரு திட்டமிட்ட தாக்குதல்களை, சிக்கல்களை நான் சந்தித்ததே இல்லை. அப்படி ஒரு தொடர் அடக்குமுறைகளை அவுட்லுக் சந்தித்தது. ரஹேஜாவை பலமுறை அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு அலைய வைத்தனர். இன்று வா, நாளை வா, நாளை மறு நாள் என்று அலைக்கழித்தனர்.

வாஜ்பாய்க்கு ஒரு கடிதம்
இதையடுத்து நான் பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினேன். அதில், டியர் அடல்ஜி, அவுட்லுக் நிறுவனரிடம் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் தொடர் ரெய்டுகள், விசாரணைகள், அவுட்லுக் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீங்களே அவசர காலத்தின்போது பழிவாங்கப்பட்டவர். எனவே அதுகுறித்து உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

உங்களை மதிக்கிறேன்
எனவே அதுகுறித்து நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ஒரு எடிட்டர் என்பவர் இப்படிப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை. ஆனால் உங்கள் மீது அதிக மதிப்பு வைத்துள்ளதால் இதை எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு பெற்றுக் கொண்டோம் என்று கூட பதில் வரவில்லை.

உள்ளிருந்து ஒரு குரல்
நியூஸ்ஹவர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வந்த பின்னர் நாம் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தருவதை எதிர்த்தது சரியா என்று எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டேன். எனக்குள் ஒரு குரல் ஒலித்தபடி இருந்தது. நாம் கொஞ்சம் ஓவராகத்தான் வாஜ்பாயை எதிர்க்கிறோமோ என்று அது என்னைக் கேட்டது.

குழப்பம் மேலும் அதிகமானது
மேலும் கட்சி பாகுபாடில்லாமல் பல கட்சிகளும் பாரதரத்னாவை வாஜ்பாய்க்குத் தர வேண்டும் என்று குரல் எழுப்பியதால் எனது குழப்பமும் அதிகமானது.

நான் அறிந்த பாஜக தலைவர்
என்னைப் பொறுத்தவரையில் நான் நன்கு அறிந்த, நன்கு பழக்கமான பாஜக தலைவர் வாஜ்பாய் மட்டுமே. அவருடன் பலமுறை அமர்ந்து நான் விவாதித்துள்ளேன். பிரதமர் இல்லத்திற்குப் போய் அவருடன் நெடு நேரம் பேசியுள்ளேன். லேட்டஸ்ட் ஜோக் முதல் அரசியல் நிலவரம் வரை அவரிடம் உரிமையாகப் பேசியுள்ளேன். அவர் மனதில் இருப்பதை பட்டென்று சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்தது.

சோகத்தில் வாஜ்பாய்.. காரணம் ஜெயலலிதா
ஒருமுறை நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது வழக்கமான ஜாலியான மூடில் அவர் இல்லை. நான் அவரிடம் ஏன் இப்படி ஒரு சோகம் என்று கேட்டபோது, இப்ப நீங்க வந்துட்டுப் போனதும், அடுத்து ஜெயலலிதா வரப் போகிறார் என்று கூறினார் இன்னும் கூடுதல் சோகத்துடன். அதைச் சொல்லி விட்டு அவர் சிரித்தாரே பார்க்க வேண்டும்.... அதுதான் வாஜ்பாய்.

அறிவார்ந்த தலைவர்
வாஜ்பாய் மிகவும் அறிவார்ந்த தலைவர். தொலைநோக்குப் பார்வை கொண்டவர். கெளரவம் மிக்கவர், நடுநிலையானவர். பாகிஸ்தானுடன் நட்பாக இருக்க வேண்டும், உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தவர். வரலாறும் அவர் பக்கம் சற்று இருந்தது. அதனால்தான் பாகிஸ்தானுடன் அதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா நெருங்க முடிந்தது. நெருக்கமாக முடிந்தது.

ஈராக் போர்
நான் வாஜ்பாயிடம் கூறினேன், ஒரு வேளை நீங்கள் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால், ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்கப் படை ஈராக்குக்குள் ஊடுறுவியபோது, அதை எதிர்த்துப் போரிட இந்தியா படைகளை அனுப்பியிருக்கும் என்றேன். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவாகவே இருந்தது பாஜக அரசு. அத்வானி ஒரு படி மேலே போய் அமெரிக்காவுக்கு நேரிலேயே போய், புஷ் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு வந்தார்.

ஐடி ரெய்டை விடுங்க.. வாஜ்பாயை ஆதரிக்கலாம்
எனவே எனது உள் மனதுக்குள் கேட்ட கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில், வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தருவதை எதிர்க்க வேண்டாம் என்பதே. வருமான வரி ரெய்டு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் விருதுக்குத் தகுதியானவர்தான் வாஜ்பாய் என்று எழுதியுள்ளார் மேத்தா.

சரி ஜெயலலிதாவால் ஏன் சோகமடைந்தார் வாஜ்பாய்
அது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்...1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனியாக 182 இடங்கள் கிடைத்தன. கூட்டணிக் கட்சிகள் 98 இடங்களைப் பெற்றன. இந்தக் கூட்டணியில் சேர்ந்து வென்ற அதிமுகவுக்கு 18 உறுப்பினர்கள் இருந்தார்கள்.

முரண்டு பிடித்த ஜெயலலிதா
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய, ஆதரவுக் கடிதம் கொடுக்கும்போதே ஜெயலலிதா முரண்டு பிடித்தார். சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி வேண்டும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு சட்ட அமைச்சர் பதவி வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிபந்தனை என்று சொல்லப்பட்டது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆதரவுக் கடிதம் கொடுத்து, அமைச்சரவையிலும் பங்கேற்றது அதிமுக. ஆனாலும் முரண்பாடு தொடர்ந்தது.

தமிழகத்தில் திமுக ஆட்சி
அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியை டிஸ்மிஸ்செய்ய அதிமுக நிபந்தனை விதித்ததாகச் சொல்லப்பட்டது. அதனை பிரதமர் வாஜ்பாய் ஏற்கவில்லை. இந்த நிலையில் திடீரென அ.தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.

தடாலடியாக ஆதரவு வாபஸ்
இதைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி விஷ்ணு பகவத் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான காரணத்தை கூட்டணிக் கட்சியான எங்களுக்குச் சொல்லவில்லை என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டார். டெல்லி சென்ற ஜெயலலிதா மாற்று அரசு அமைப்பதற்கான ஆலோசனையில் இறங்கினார். ஆதரவை வாபஸ் வாங்குவதாகக் கடிதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அதிமுகவால் கவிழ்ந்த வாஜ்பாய்
15.4.1999 அன்று வாஜ்பாய், தனது அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அவரது தீர்மானத்தை ஆதரித்து 269 ஓட்டுகளும் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று 270 ஓட்டுகளும் விழுந்தன. ஆட்சி கவிழ்ந்தது. இதுதான் வாஜ்பாயின் அன்றைய சோகத்திற்குக் காரணம்.
அதிமுகவால் ஆட்சியை இழந்த பாஜக பின்னர் திமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது வரலாறு.












Click it and Unblock the Notifications