விபத்து வழக்கு: கமால் கான் கோணத்தால் இடியாப்ப சிக்கலில் சல்மான் கான்
மும்பை: சல்மான் கான் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாடகர் கமால் கான் அளிக்கும் சாட்சியத்தை வைத்து தான் வழக்கில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து சல்மான் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் சல்மானின் ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சல்மான் தரப்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகி வாதாடினார்.

கமால் கான்
விபத்து நடந்த காரில் சல்மான் கான், அவரது பாடிகார்ட் ரவீந்திர பாட்டில், பாடகர் கமால் கான் ஆகியோர் இருந்தனர். காரை சல்மானின் டிரைவர் அசோக் சிங் ஓட்டினார். முக்கிய சாட்சியான கமால் கானை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்று அமித் தேசாய் தெரிவித்தார்.

13 ஆண்டுகள்
கார் விபத்து வழக்கு 13 ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று ஜாமீன் பெறுகையில் மட்டும் திடீர் என சல்மான் தரப்பு கமால் கானின் பெயரை தெரிவித்து அவர் தான் முக்கியமான சாட்சியம் என்று தெரிவித்துள்ளது.

யார் இந்த கமால்?
இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகரான கமால் கான் சல்மான் கானின் நண்பர் ஆவார். அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

சாட்சியம்
விபத்து நடந்த பிறகு கமால் கான் மும்பை போலீசார் முன்பு ஆஜராகி சம்பவம் நடந்தபோது சல்மான் தான் காரை ஓட்டினார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அத்தகைய சாட்சியம் அளித்தவரை மும்பை போலீசார் தொடர்ந்து விசாரிக்காமல் விட்டுள்ளனர்.

அசோக் சிங்
நான் காரை ஓட்டவில்லை என்கிறார் சல்மான். நான் தான் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேன் என்கிறார் சல்மானுக்கு பகல் நேரத்தில் கார் ஓட்டும் அசோக் சிங். காரில் இருந்த பாடிகார்ட் ரவீந்திர பாட்டில் இறந்துவிட்டார். அப்படி இருக்கையில் கமால் கானின் சாட்சிம் முக்கியத்துவம் பெறுகிறது.

சிறை
கமால் கான் தற்போது இந்தியா வந்து சல்மான் தான் காரை ஓட்டினார் என்று தெரிவித்தால் அவருக்கு சிறை நிச்சயம். அப்படி இல்லாமல் அசோக் சிங் காரை ஓட்டினார் என கமால் தெரிவித்தால் சல்மான் வழக்கில் இருந்து விடுபட வாய்ப்பு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications