ரூபாய் நோட்டுக்கள்… மோடியின் முடிவும், தமிழகத்தின் மூன்று இடைத் தேர்தல்களும்!
-ஆர்.மணி
இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாதென்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 ம் தேதி இரவு அறிவித்து விட்டார். 8ம் தேதி நள்ளிரவுடன் இந்த நோட்டுக்கள் செல்லாதென்றும் கூறிய பிரதமர் தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளில், தபால் நிலையங்களில் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
'உங்கள் பணம் உங்களிடமே இருக்கும். நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை' என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். வெள்ளமென பெருகிவிட்ட அதிக மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்கும், நாட்டில் கருப்பு பணத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் இது தேவைப் படுகிறது என்று அரசின் இந்த முடிவுக்கு பிரதமர் விளக்கம் தெளிவாகவே கொடுக்கிறார்.

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதை விட போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வங்கித் துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
"ஆம் இது உண்மைதான். இன்று கிட்டத்தட்ட 23 லட்சம் கோடிக்கு 500, 1,000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இது பாகிஸ்தானின் கைங்கர்யம் என்றே மத்திய அரசு நம்புகிறது. ஏற்கனவே மன்மோஹன் சிங் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நிலைமை வந்தது. அப்போது வந்த ஓர் ரகசிய அறிக்கையில் இந்த அபாயம் தெளிவாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்கு இது நன்கு தெரிந்திருந்தது. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் யோசனை அப்போதும் வந்தது. ஆனால் அந்த யோசனை ஒதுக்கித் தள்ளப் பட்டு கூடுதல் பாதுகாப்புகளுடன் அப்போது 500, 1,000 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன,'' என்று ஒன் இந்தியாவிடம் கூறினார் இந்தியன் வங்கிப் பணியாளர் சங்கத்தின் ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி செல்லப்பன் நாகராஜன்.
மேலும் கருப்பு பணத்தை விட கள்ள ரூபாய் நோட்டுக்கள்தான் இந்த நடவடிக்கையின் மூல குறி என்றும், இந்த நடவடிக்கை பெரியளவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கோ, பொருளாதார மேம்பாட்டிற்கோ உதவப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"ஆம். கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் நோக்கம் என்றால், மத்திய அரசு எதற்காக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை உடனடியாக புழக்கத்தில் விட இருக்கிறது? இந்த புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 11 ம் தேதியிலிருந்து ஏஎடிஎம் களிலேயே புழக்கத்தில் விடப்பட இருக்கிறது. கருப்பு பணத்தை டெம்போ டிராவலரில் கொண்டு போனவர்கள் இனிமேல் குட்டி யானை வண்டியில் கொண்டு போய் விடுவார்கள். மேலும் இந்தியாவின் கருப்பு பண பொருளாதாரத்தின் ஆணி வேர், நாட்டிற்கு வெளியே சுவிட்சர்லாந்து, செஷல்ஸ் தீவுகள், மொரீஷியஸ் தீவுகள் போன்ற இடங்களில் இருக்கின்றது. ரூ 70 லட்சம் கோடி ரூபாய்க்கு குறையாமல் இந்தியர்களின் கருப்பு பணம் வெளிநாடுகளில் இருக்கிறது. ஆகவே அதனைக் கொண்டு வராமல் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையும் தற்போதைக்கு தேவைதான். இது பெரியளவுக்கு தற்போதைக்கு போலி நோட்டுக்களை ஒழிக்க உதவும், ஓரளவக்கு கருப்பு பணத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதன் மூலம் மேலும் அதிகமாக கருப்பு பண நடமாட்டத்துக்குத் வழிவகுக்கப் பட்டிருக்கிறது'' என்று அவர் மேலும் கூறுகிறார்.
இது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ் நாட்டில் இந்த முடிவு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது, அதுவும் உடனடியாக இந்த முடிவின் தாக்கம் என்னவென்பதுதான் கேள்வி. நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பு மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் தமிழ் நாட்டிலும் இருக்கப் போகிறது. ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்னவென்பதுதான் சுவாரஸ்யமான விவகாரம்.
இந்த முடிவை திமுக, பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே வரவேற்கின்றன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் இதனை எதிர்க்கின்றன. அஇஅதிமுக அமைதியாக இருக்கிறது. எந்த கருத்தும் தமிழகத்தை ஆளும் கட்சியிடமிருந்து வரவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த இந்த 50 நாட்களில் அரசியல் ரீதியில் எந்த முக்கியமான பிரச்சனையிலும் அஇஅதிமுக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்பது உண்மை. இதே நிலைதான் தற்போதும் தொடருகிறது.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் தேர்தல்களில் பணம் விளையாடுகிறது. 2003 சாத்தான் குளம் இடைத்தேர்தலில் துவங்கிய இந்த விளையாட்டு, 2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டு இடைத்தேர்தல்களில் லட்டுக்குள் மூக்குத்தி வைப்பதில் வளர்ந்தது. பின்னர் 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 11 இடைத்தேர்தல்களிலும் பெரு வளர்ச்சியை எட்டி, 2009 ஜனவரியில் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் 'திருமங்கலம் ஃபார்முலா' வாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதன் பின்னர் வந்த 'அம்மா' ஆட்சியில் நடைபெற்ற 7 இடைத்தேர்தல்களிலும் இது அடுத்துகட்ட பரிணாமத்தை அடைந்தது. எப்படியென்றால் 2013 ல் நிகழ்ந்த புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் பகுதியில் மட்டும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்று கூறி வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அளவுக்கு வளர்ந்தது.
இவற்றையெல்லாம தூக்கிச் சாப்பிடும் விதமாக 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வும், அஇஅதிமுக வும் கரன்சி நோட்டுக்களை கரைபுரண்டு ஓடச் செய்தனர். திக்கு முக்காடிய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களை முற்றிலுமாக ரத்து செய்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பணப் பட்டுவாடாவை எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறி தேர்தல் ஆணையம் தேர்தல்களை ரத்து செய்தது அதுதான் முதன் முறையாகும்.
தற்போது இந்த இரு தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி என்று மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. கடந்த 13 ஆண்டுகளாக வாக்காளர்களை பண மழையில் குளிப்பாட்டுவதை ஒரு கலையாகவே பயின்று வந்திருக்கும் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தற்போது என்ன செய்யப் போகின்றன? பணத்தை எப்படி பட்டுவாடா செய்யப் போகின்றனர்? பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' சற்று அதிகமாகவே இருக்கும். அதுவும் 500, 1,000 ரூபாய் தாள்களாகவே இருக்கும். பொதுத்தேர்தலில் ஒரு ஓட்டின் விலை சாதாரணமாக 250 ரூபாய். சில இடங்களில் இது 500, 1,000 என்று போனது. ஆனால் பொதுவாக 250 ரூபாய்தான். ஆனால் இடைத்தேர்தலில் 500, 1,000 க்கு குறைந்து 'செந்தமிழ் நாட்டின் வாக்காளப் பெருங்குடி மக்கள்' வாங்குவதில்லை.
ஆகவே இப்போது என்ன செய்யப் போகின்றனர் இரண்டு கழக கண்மணிகளும்? இதில் ஒரு முக்கியமான வேட்பாளர் 50 கோடி ரூபாயை 500, 1,000 ரூபாயாகவே தற்போது கையில் வைத்துக் கொண்டு மூட்டையைப் பிரிக்கத் தயாராக இருந்தாராம். அவர் மூட்டையைப் பிரிக்க எத்தணித்த வேளையில் மோடி அவரது முயற்சியில் மண்ணை அள்ளி போட்டு விட்டார். இனிமேல் இந்த 50 கோடியை 100 ரூபாயாக மாற்ற முடியாது. பொருளாக கொடுக்கலாம் என்றால் அதற்கான விலையாக உற்பத்தியாளரிடம் இந்த 50 கோடியைத்தான் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் 500, 1,000 ரூபாய் தாள்கள் என்பதால் யார் வாங்குவார்கள்?
இதே கதைதான் அவரை எதிர்க்கும் வேட்பாளருக்கும். ஆனால் அவர் வெற்றி பெறுவதில் இந்தளவுக்கு முனைப்பு காட்டவில்லை என்கின்றனர் அவரது கழகத்தின் கண்மணிகள். 'போட்டியிடா விட்டால் தலைமை கோபித்துக் கொள்ளும் என்பதால்தான் அவர் போட்டியிடுகிறார். எப்படியும் இன்றைய சூழ்நிலையில் தான் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பதால்தான் அவர் போட்டியிடுகிறார். மற்றபடி அவர் ரிலாக்சாகத்தான் இருக்கிறார்' என்கின்றனர் அவரது கட்சிக் காரர்கள்.
ஆனால் முதலில் சொன்னவருக்கோ எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற வெறி இருப்பதால் தற்போது பணப் பட்டுவாடாவுக்கு என்ன செய்வது, எப்படி வாக்காளர்களின் மனங்கள் குளிர்விப்பது என்று தெரியாமல் உடைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.
மோடியின் இந்த முடிவு தமிழகத்தின் இடைத் தேர்தல்களை மட்டுமல்லாமல், அடுத்து வரவிருக்கும் உத்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களையும் கடுமையாகவே பாதிக்கும் என்கின்றார்கள். 'இந்த முடிவு மத்திய ஆளுங் கட்சியின் பெரும் புள்ளிகளுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவர்கள் எல்லாவற்றையும் 100 ரூபாய் கட்டுக்களாக மாற்றி விட்டார்கள். ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நிலை குலைந்து போயிருக்கின்றனர். மோடி ஒரே காய் நகர்த்தலில் இந்த மூன்று கட்சிகளையும் 'செக் மேட்' செய்து விட்டார்' என்கிறார் டில்லி பத்திரிகையாளர் ஒருவர்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசின் இந்த முடிவு இடைத் தேர்தல்கள் நடக்கும் நேரத்தில் மாநிலத்தின் ஆளுங் கட்சிக்கு 'ஆப்பு வைக்கும்' முடிவாக இல்லாவிட்டாலும், நிச்சயமாக அஇஅதிமுக வுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திய முடிவுதான். 'மோடி வைத்த ஆப்பு' தமிழ் நாட்டின் இடைத் தேர்தல்களில் ஏதாவது மேஜிக் கை ஏற்படுத்துமா, கடந்த 13 ஆண்டுகளாக மாநிலத்தில் எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளுங் கட்சி மட்டுமே வெற்றி பெறும் என்ற ரெகார்டை உடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்!












Click it and Unblock the Notifications