பயணிகள் ரயில் கட்டணத்தை இப்பொழுது இல்லாவிடில் எப்பொழுது குறைக்க முடியும்?
டெல்லி: டீசலின் விலை குறைந்துள்ளதையடுத்து பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வரும் நிதியாண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பாதிக்குப் பாதியாக குறைந்ததையடுத்து பெட்ரோல், டீசலின் விலையும் குறைந்துள்ளது. டீசல் விலை குறைந்துள்ளதால் ரயில்வே துறைக்கு எரிபொருள் செலவு குறைந்துள்ளது.

எரிபொருள் செலவு குறைந்துள்ளதால் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியுடன் துவங்கும் 2015-2016ம் நிதியாண்டில் ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை சேமிக்க முடியும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கருதுகிறார். எரிபொருள் செலவு குறைந்துள்ளது மற்றும் சரக்கு ரயில் கட்டணம் அதிகரித்துள்ளதால் ரயில்வேக்கு வருமானம் அதிகரித்துள்ளது.
அதனால் பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசோ எரிபொருளில் மிச்சமாகும் பணத்தை ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடு செய்ய உள்ளது. அதன்படி தான் இன்றைய பட்ஜெட்டில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே தற்போது தான் இரண்டாவது முறையாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மிக அதிக அளவில் குறைந்துள்ளது. அதனால் டீசல் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் கூட பயணிகள் ரயில் கட்டணத்தை குறைக்காவிட்டால் பின்னர் எப்பொழுது குறைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications