அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிடவா? அமைச்சர்களிடம் கேட்ட சசிகலா.. ஏன் தெரியுமா?
தென் மாவட்ட அதிமுகவை திருப்திப்படுத்த, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கலாமா என்பது பற்றி அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசித்தாராம்.
பெங்களூர்: தன்னை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் சந்தித்த 4 அமைச்சர்களிடம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் பற்றி, சசிகலா பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் நேற்று பிற்பகல் சந்தித்தனர்.
அவர்களுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு, கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் செயல்பாடுகள், தீபா பேரவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், கட்சியின் துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அளித்த பேட்டி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம்
இந்த சந்திப்பின்போது, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா தரப்பு வழங்கிய விளக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற விதி கட்சியின் சட்ட நெறிமுறையில் தெளிவாக உள்ளது. மேலும் தற்காலிகமாகவும் அப்பதவிக்கு யாரையும் நியமிக்க முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

ராஜினாமா திட்டம்
எனவே, கவுரவமாக பொதுச்செயலாளர் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்யலாமா? அல்லது தங்களுடைய விளக்கத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா? என்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் சசிகலா. தேர்தல் ஆணையத்தில், டி.டி.வி.தினகரன்தான், சசிகலா சார்பாக பதில் அளித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

புது பொதுச்செயலாளர் யார்
பதவியை ராஜினாமா செய்தாலோ, தேர்தல் ஆணையமே பதவியை ரத்து செய்தாலோ, புதிய பொதுச் செயலாளராக யாரை நியமிப்பது என்றும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியுள்ளதால், தென் மாவட்ட அதிமுகவை திருப்திப்படுத்த, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாம்.

தீவிர ஆலோசனை
சட்ட சபையில் நடந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களையும் சசிகலாவிடம் அமைச்சர்கள் எடுத்துக் கூறியதாக தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கு பல ஆலோசனைகளை சசிகலா வழங்கியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications