"400 கார்கள்.." சைரன்களை அலறவிட்டபடி.. காங்கிரஸில் இணைந்த டாப் தலைவர்! ம.பி-இல் பாஜகவுக்கு செம ஷாக்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஷிவ்புரி பகுதியில் செல்வாக்கு மிக்க பைஜ்நாத் சிங், 400 கார்கள் கொண்ட பெரும் படையுடன் இப்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக தேர்தலைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் வெல்ல வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இப்போதே தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது.

இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் 2020இல் சிந்தியா உடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பைஜ்நாத் சிங் என்பவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
மத்தியப் பிரதேசம்: இதற்காக அவர் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் இருந்து 400 கார்களை கொண்ட பெரிய படையுடன் சுமார் 300 கிமீ பயணித்து போபால் சென்றார். ஷிவ்புரி பகுதியில் செல்வாக்கு மிக்க பெற்ற பைஜ்நாத் சிங், 2020இல் அங்கே சிந்தியாவுடன் காங்கிரஸில் இருந்து விலகினார்.. இது அப்போது அங்கே இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழக் காரணமாக இருந்தது. சிந்தியாவுடன் சேர்ந்து இவரும் பாஜகவில் ஐக்கியமானார்.
சிந்தியா இப்போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார். மறுபுறம் பைஜ்நாத் சிங் பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்க அவர் கடுமையாக முயன்று வந்தார். இருப்பினும், பாஜக தலைமை நம்பிக்கையாக எதுவும் கூறாததால் அவர், அங்கிருந்து விலகி இப்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மெகா பேரணி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் திக்விஜய சிங் ஆகியோர் தலைமையில் அவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பைஜ்நாத் சிங்குடன், பாஜகவில் இருந்த 15 மாவட்ட தலைவர்களும் காங்கிரஸில் இணைந்தனர். கட்சி மாறுவதே மெகா லெவலில் செய்ய முடிவெடுத்த அவர், ஷிவ்புரியிலிருந்து போபாலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு 400 கார்கள் கொண்ட படையைத் திரட்டி வந்தார். அதில் பல கார்கள் சைரன்களை அடித்துக் கொண்டு வேகமாகச் சென்ற வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதேநேரம் மறுபுறம் காரில் இருந்த சைரன்கள் குறித்தும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.. ஏனென்றால், தற்போதுள்ள சட்டத்தின்படி, அவசரக்கால சேவை வழங்கும் வாகனங்களுக்கு மட்டுமே சாலையில் சைரன்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு, அதாவது ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள், காவல்துறை உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சைரன்களை பயன்படுத்த முடியும். விதி இப்படி இருக்கும் போது சைரன்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் பாஜக தலைவர்களும் இதைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளனர்,

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018இல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. ஆட்சியில் இருந்த சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜகவால் வெறும் 109 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போதும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் தேவைப்பட்டது. அப்போது மற்ற கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது.
இருப்பினும், சுமார் 1.5 ஆண்டுகளில் சிந்தியா தலைமையில் சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவில் சென்று ஐக்கியமாகினர். இதனால் அப்போது ம.பி.-இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இது அப்போது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications