கணவனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வந்த பெண் பலாத்காரம்: மூவர் கைது
பதான்: உத்தரப்பிரதேசத்தில் உள்ள பதானில், பெண் ஒருவரை கூட்டாக பலாத்காரம் செய்து, அவரை கத்தியால் தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு பழத்தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனது கணவருக்கு, உணவு கொடுக்க சென்று திரும்பிய 25 வயது மிக்க இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்ததாக பதான் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், தப்பிக்க முயன்ற பெண்ணை மூன்று பேரும், கத்தியால் தாக்கியதில் காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வந்த புகாரை அடுத்து, இது தொடர்பாக பீர் பகாஷ், டிங்கு மற்றும் ஹனீஃப் என்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
உத்தரபிரதேசத்தின் பதான் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் இரு தலித் இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கடும் கண்டனங்கள் எழுந்தன. எனினும் பதான் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.