அவதூறு வழக்கு.. கட்காரியுடன் சமாதானமாகிறார் கேஜ்ரிவால்!
டெல்லி: அவதூறு வழக்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் சமாதனமாக செல்ல இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி மீது முன்னர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் புகார்களைத் தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் மீது கட்காரி அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.

சிறைக்கு போன கேஜ்ரிவால்
இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க முன்வந்தது. ஆனால் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று பிடிவாதம் பிடித்து சிறைக்குப் போனார் அரவிந்த் கேஜ்ரிவால்.

மீண்டும் விசாரணை
பின்னர் சில நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் நீதிமன்ற அறிவுரையை ஏற்று ஜாமீன் தொகையைக் கட்டி வெளியே வந்தார் கேஜ்ரிவால்.

சமாதனமாகப் போகிறோம்
இந்த வழக்கின் விசாரணை சனிக்கிழமையன்று நடந்த போது கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், கட்காரி தரப்பினருடன் சமாதானமாக செல்ல இருக்கிறோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

விசாரணையை ஒத்தி வைக்க கோரிக்கை
மேலும் கட்காரி மற்றும் கேஜ்ரிவால் தரப்பு வழக்கழறிஞர்கள், இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 16-ந் தேதி விசாரணைக்கு வருவதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அக்டோபர் 18-ந் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications