மோடி மைதானத்தை மிஞ்சும் பிரம்மாண்ட ஸ்டேடியம்.. அமராவதியில் அமைகிறது! அசத்தும் சந்திரபாபு நாயுடு
அமராவதி: நமது நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இப்போது குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. அங்குள்ள நரேந்திர மோடி மைதானம் தான் உலகிலேயே மிகப் பெரிய மைதானமாக உள்ளது. ஆனால், அதை மிஞ்சும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் அமராவதியில் அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த மே மாதம் பதவியேற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, மாநில தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. அங்குப் பல திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி நமது நாட்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி 2029ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளை அமராவதியில் நடத்தும் முயற்சிகளில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்:
இது தவிர இப்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை மிஞ்சும் வகையில் ஆந்திர தலைநகரான அமராவதியில் 1.32 லட்சத்துக்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானத்தை அமைக்கவுள்ளதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டால், அது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இருக்கும்.
ஆந்திர கிரிக்கெட் சங்கத் தலைவரான கேசினேனி சிவந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், அப்போது தான் அவர் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தத் திட்டத்திற்காக அமராவதி பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேவை என மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
200 ஏக்கர்:
இது தொடர்பாக கேசினேனி சிவந்த் மேலும் பேசுகையில், "அமராவதியில் நாங்கள் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் விளையாட்டு நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக இந்த கிரிக்கெட் மைதானம் இருக்கும். இந்த மைதானத்திற்குத் தேவையான நிதி உதவியை பிசிசிஐ வழங்கும். அதேநேரம் குறிப்பிட்ட நிதியை மாநிலத்திலும் திரட்ட உள்ளோம்.
கிரிக்கெட் அகாடமி:
இந்த மைதானம் நாட்டின் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மறுவரையறை செய்வது மட்டுமின்றி.. அமராவதிக்குச் சர்வதேச அளவில் விளையாட்டு துறையில் முக்கிய இடத்தை பெற்றுத் தரும். வட கடலோர ஆந்திரா, விஜயவாடா மற்றும் ராயலசீமா உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று தனித்தனி கிரிக்கெட் அகாடமிகள் நிறுவப்படும். இந்த அகாடமிகளில் பயிற்சி அளிக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ் மற்றும் ராபின் சிங் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வகையில் விசாகப்பட்டினம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவோம். உள்ளூர் திறமைகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் நிச்சயம் ஐபிஎல் அணிகளில் இடம்பிடிப்பார்கள்" என்றார்.
இப்போது உலகில் உள்ள மிகப் பெரிய 5 கிரிக்கெட் மைதானங்கள்:
1) நரேந்திர மோடி ஸ்டேடியம் (அகமதாபாத், இந்தியா) - 1.32 லட்சம் பேர் வரை அமரலாம்.
2) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (மெல்போர்ன், ஆஸ்திரேலியா)- சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான இருக்கை வசதி கொண்டது.
3) ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா, இந்தியா) - ஈடன் கார்டன்ஸ் 68,000 ஆயிரம் இருக்கைகளைக் கொண்டதாக உள்ளது.
4) ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (ராய்ப்பூர், இந்தியா) - இங்கு ஒரே நேரத்தில் 65,000 க்கும் அதிகமானோர் அமரலாம்.
5) பெர்த் ஸ்டேடியம் (பெர்த், ஆஸ்திரேலியா) -சுமார் 61,000 பேர் அமரும் வசதி இதில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications