இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தாக்குதல்.. உடல்களை அடையாளம் காணக்கூட முடியவில்லை.. காஷ்மீர் சோகம்
Recommended Video

டெல்லி: காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிக மோசமானதாகும். பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுதான் என்கின்றனர் அத்துறை நிபுணர்கள்.
ஸ்ரீநகர்-ஜம்மு சாலையில், சிஆர்பிஎப் படையை சேர்ந்த சுமார் 2500 பேர் 78 வாகனங்களில் நேற்று பிற்பகலில் பயணித்தனர். அப்போது 350 கிலோ அளவுக்கு எடை கொண்ட வெடி மருந்துகளை ஸ்கார்பியோ காரில் ஏற்றிக்கொண்டு தீவிரவாதி அடில் அகமது தார் என்பவன், பஸ் ஒன்றின்மீது மோதச் செய்தான்.
இதையடுத்து, பயங்கர சத்தத்தோடு, வெடிகுண்டுகள் வெடித்தன.

12 கி.மீ எதிரொலித்த சத்தம்
இந்த சத்தம் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டுள்ளது. அப்படியானால், தாக்குதலின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்கள் கூட புரிந்து கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துவிட்டதால், பாதுகாப்பு படை வீரர்களுக்கு முதலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

துப்பாக்கி சூடு
சுதாரிப்பதற்குள், எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. இதனிடையே, குண்டு வெடிப்பில் தப்பினால், அந்த வீரர்களையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரின் பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பிற பஸ்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வருவதற்குள், அந்த தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். தற்கொலைப்படை போல தாக்குதல் நடத்திய அடில் உடல் சிதறி பலியானான்.

சிதைந்த உடல்கள்
இந்த கொடூர தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில் பலரது உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் ஒரு வீரர் என இருவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒருவரின் உடலை அடையாளமே காண முடியவில்லை. அந்த அளவுக்கு, துண்டு துண்டாக சிதறி சாலைகளில் சதைகள் சிதறிக்கிடக்கின்றன. தலைகளும், கைகளும் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் நிலையில், சாலையில் ரத்த ஆறே ஓடியுள்ளது.

நூற்றாண்டின் பெரிய தாக்குதல்
இந்த நூற்றாண்டில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும். 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, டாடா சுமோ வாகனத்தில் வெடிகுண்டை நிரப்பி, 3 தீவிரவாதிகள், காஷ்மீர் சட்டசபை வளாக கேட்டில் சென்று மோதி தாக்குதல் நடத்தினர். அதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 2016ம் ஆண்டு, காஷ்மீரின் யூரி பகுதியில், 4 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
