பானிபூரி டூ பால் கடை! யஷஸ்வி ஆடம்பரத்தை வெளிச்சம் போடும் இன்ஸ்டா
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மந்திர சொல்லாக மாறி இருக்கிறது யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயர். அந்தளவுக்குச் சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்த இந்த விளையாட்டு வீரர் இன்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் டில் நடைபெற்றது. அதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாகும்.
இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். அதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்களும் அடங்கும்.
இதன் மூலம் தனது சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்திருக்கிறார். இப்படி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ் வாலின் வெற்றி இன்றைக்குப் பல இளம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
போட்டிக்கு பிறகான ஒரு பேட்டியில் ஜெய்ஸ்வால், "டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தேன். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அதைக் குறிப்பிடத்தக்கச் சாதனைகளாக மாற்றுவது முக்கியம்" என்று கூறியுள்ளார்.
இந்த வெற்றி தருணத்தில் கண்களைப் பறிக்கும் சில ஆடம்பரமான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால். அதில் "இங்கிலாந்திற்கு எதிரான இரட்டை சதம் ஒரு பரபரப்பான வெற்றி! அர்ப்பணிப்பு உண்மையிலேயே பலனைத் தருகிறது.
இருந்தாலும் இது போன்ற தருணங்கள் முயற்சியை உண்மையாக உறுதிப் படுத்துகின்றன. எனது அணி ஸ்பிரிட் தான் வெற்றிக்கு வழிவகுத்தது. அதற்கு என் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பானிபூரி விற்றவர். இன்று இந்தளவுக்கு உயர்ந்து வந்துள்ளார். நம் கண்முன்னால் ஒருவர் வாழ்க்கையில் தரைமட்டத்திலிருந்து மலை உச்சிக்கு முன்னேறி இருக்கிறார். அவர் கடந்து வந்த பாதை என்ன?
1. ஆரம்பக்கால வாழ்க்கை
யஷஸ்வி ஜெய்ஸ்வால் டிசம்பர் 28, 2001 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள சூரியவானில் பிறந்தார். இவர் தனது கிரிக்கெட் பயணத்தை மிக இளம் வயதிலேயே தொடங்கிய யஷ்ஸ்வி, ஆட்டத்தை ஒரு தொழில்முறையாக ஏற்பதற்காக மும்பைக்கு வந்தார்.
இளம் கிரிக்கெட் வீரர் இவர், ஆரம்பக் காலங்களில் கிரிக்கெட் பயிற்சியின்போது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

ஜெய்ஸ்வால் ஒரு பால் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். வேறு வழியில்லாமல் அங்கேயே அவர் தங்கிக் கொண்டார். அதுவே அவரது வீடாகவும் பணி செய்யும் கடையாகவும் இருந்தது. ஆனால் அந்த வேலையில் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. எனவே அங்கிருந்து வெளியேற்றினார் யஷஸ்வி.
அதன்பின்னர் அவர் ஆசாத் மைதானத்தில் உள்ள மைதானத்தில் ஒரு கூடாரத்திற்குச் சென்று பானிபூரி விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார். அது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.
இப்படியான மூன்று வருடகால போராட்டங்களுக்குப் பிறகு, மும்பை பயிற்சியாளரான ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வழிகாட்டியாக மாறினார்.

கூடவே அவரே சட்டப்பூர்வமா பாதுகாவலராகவும் ஆனார். இவரது ஒத்துழைப்பால் 2018 இல், ஜெய்ஸ்வாலால் இறுதியாக இந்திய அணியின் U-19 இல் ஒரு இடத்தைப் பெற முடிந்தது.
2. ஐபிஎல் வருவாய்
சர்வதேச U-19 போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆடியபோது, அவரது சிறப்பான ஆட்டம் ஐபிஎல் உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸின் கவனத்தை ஈர்த்தது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.4 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்தனர்.
2022 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் அணி 4 கோடி ரூபாய் கொடுத்து அவரைத் தக்க வைத்துக் கொண்டது. 2023 ஐபிஎல் போது, டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 13 பந்துகளில் அதிவேக அரைசதத்தை அடித்ததன் மூலம் கேஎல் ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸை ஆகியோரின் சாதனையை ஜெய்ஸ்வால் விஞ்சினார்.

3. ஆண்டு வருவாய்
டிஎன்ஏ இணைய தளம் மற்றும் கிடைக்கும் பிற பொது தரவுகளின் மூலம் இவரது வளர்ச்சி பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் நிகர மதிப்பு சொத்து ரூ.10.73 கோடி எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு மாதமும் சுமார் 35 லட்சம் சம்பாதித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான அவரது ஒப்பந்தத்தைத் தவிர, அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்களிலிருந்து ஒரு கணிசமான தொகையை அவர் சம்பாதித்து வருகிறார்.
4. மும்பையில் ஒரு 5-BHK அபார்ட்மெண்ட்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023 இல் தானேயில் (மும்பை) 5-BHK அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி இருக்கிறார். அதன் மூலம் மும்பையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கும் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார். அந்த வீடு 1,500சதுர அடி . இந்த வீடு ஐரோப்பிய அழகியல் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மும்பையில் வீடு வாங்கியது குறித்து ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "என் மனதில் ஒரே ஒரு விஷயம் இருந்தது. நான் மும்பையில் ஒரு வீடு வாங்க விரும்பினேன். நான் மும்பையில் பல இடங்களில் வசித்து வருகிறேன்.
என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்று நான் விரும்பினேன். எனக்குப் பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. எனது எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அவ்வளவுதான்" என்று விளக்கியுள்ளார்.

5. விலையுயர்ந்த கார்கள்
மும்பையில் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கியது போக, ஜெய்ஸ்வால் அதிகப் பணத்தை செலவழித்து மெர்சிடிஸ் எஸ்யூவி ஆடம்பரமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜெய்ஸ்வால் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதில் விடுமுறைக் காலங்களில் ஊர் சுற்றவும் திட்டமிட்டு உள்ளார்.













Click it and Unblock the Notifications