லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி பறிக்கப்படுகிறதா? யோகி ஆதித்யநாத் சொன்ன பதில்
லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும், அதே நேரம் நான் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட மாட்டேன் என்று, யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆஜ் தக் என்ற ஹிந்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் என்ன தெரிவித்துள்ளார். இதோ:
எனது முன்னுரிமை கட்சி மதிப்பு மற்றும் கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதே தவிர, அதிகாரத்தை பெறுவது அல்ல. 400 சீட் வெல்வோம் என்பது பாஜகவின் நம்பிக்கையல்ல, நாட்டின் தாரக மந்திரமாக மாறிவிட்டது.

இந்த முழக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால பணியின் மீதான பொதுமக்களின் அபிமானத்தை பிரதிபலிக்கிறது. மோடி ஆட்சியில் நடந்துள்ள வளர்ச்சி, பாதுகாப்பு உணர்வு, நாட்டின் மரியாதை உயர்வு மற்றும் ஏழைகள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த முழக்கத்தை அவர்களாகவே கூறுகிறார்கள். ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வரும்போது, மோடி அரசு மீண்டும் அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 என்ற இலக்கையும் அடையும்.
எதிர்க்கட்சிகளுக்கு இப்போது பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே யோகியை முதல்வர் பதவியை விட்டு நீக்கப்போகிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் பிரிவினை அரசியல் செய்கிறது. முதலில் காங்கிரஸ் நாட்டைப் பிரித்தது, பின்னர் பிராந்தியம், மொழி மற்றும் இப்போது ஜாதி அடிப்படையில் பிரிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, அதிகாரம் முக்கியம் அல்ல, ஆனால் கட்சியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்காக பணியாற்றுவது எங்கள் முன்னுரிமை.
உ.பி.யில் 80 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க பிரச்சாரம் செய்வதை அகிலேஷ் யாதவ் கேலி செய்துள்ளார். வாரணாசியில் பாஜக வெல்லும் என்பதை அகிலேஷே ஒப்புக்கொள்கிறார். இனிமேல் அவர் கோரக்பூர், மெயின்புரி, கன்னோஜ், அசம்கர் என எல்லா இடங்களிலும் பாஜக வெல்லும் என்று சொல்வார். ஆக மொத்தம் 80 இடங்களில் வெற்றி பெறத்தான் போகிறோம்.
கன்னௌஜ் தொகுதியில் கடந்த முறை வென்றோம், இந்த முறையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை அசம்கரில் வெற்றி பெற்றோம், இம்முறையும் வெற்றி பெறுவோம். மெயின்புரியிலும் பாஜக வெற்றி பெறும். இவற்றை சவால் நிறைந்த தொகுதிகள் என எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. உ.பி.யில் 80 நிச்சயம், பாரதத்தில் 400 தொகுதிகள் லட்சியம், இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.












Click it and Unblock the Notifications