தாலி கட்டிய கையோடு தனிக்குடித்தனம் போகத் துடிக்கும் இளம் இந்தியர்கள்
டெல்லி: திருமணத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைத் துணையுடன் தனிக்குடித்தனம் செல்லத் தான் இன்றைய இளம் இந்தியர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
திருமணத்திற்கு மணமகள், மணமகன் தேடுபவர்களுக்கு உதவி வரும் ஷாதி.காம் என்ற இணையதளம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. திருமணம் குறித்து இளம் தலைமுறையினரின் மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளவே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
24 வயது முதல் 34 வயது வரையிலான 4 ஆயிரத்து 617 பெண்கள் மற்றும் 3 ஆயிரத்து 952 ஆண்கள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டனர். அதன் முடிவு விவரம் வருமாறு,

பெண்கள்
திருமணத்திற்கு பிறகு எங்கு வாழ விரும்புகிறீர்கள் என்று திருமணமாகாத பெண்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு கணவருடன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புவதாக 64.1 சதவீத பெண்களும், மாமனார், மாமியாருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக 29.6 சதவீதம் பேரும், பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக 6.3 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள்
ஆண்களில் 43.9 சதவீதம் பேர் திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறார்கள். மேலும் 54.3 சதவீதம் பேர் அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். 1.8 சதவீத ஆண்கள் தான் மனைவியின் பெற்றோர் வீட்டில் வாழ விரும்புவதாக கூறியுள்ளனர்.

மாப்பிள்ளை
உங்கள் கணவர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறீர்களா என்று பெண்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு 27.3 சதவீதம் பேர் ஆமாம் என்றும், 30.1 சதவீதம் பேர் இல்லை என்றும், 42.6 சதவீதம் பேர் பார்க்கலாம் என்றும் பதில் அளித்துள்ளனர்.

மருமகன்கள்
திருமணத்திற்கு பிறகு மாமியார் வீட்டில் செட்டில் ஆக 4.7 சதவீதம் ஆண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 73.5 சதவீதம் ஆண்களுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க விருப்பம் இல்லை. 4.7 சதவீதம் ஆண்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications