வந்துக்கிட்டு இருக்கேன்.. 6.45க்கு குடும்பத்தினரிடம் சந்தோஷமாக பேசிய இளைஞர் பலி.. ஊரே சோக மயம்!
கொல்கத்தா : யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் 6.45 மணியளவில் குடும்பத்தினரிடம் போனில் பேசிய நிலையில், 7 மணியளவில் நடந்த விபத்தில் பலியாகியுள்ள சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளானது. ஏற்கனவே தடம்புரண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.
இந்தக் கோர விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோரில் 160க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த ரயில் விபத்தின் போது ரயிலில் பயணித்த மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாகர் கேரியா என்ற 30 வயது இளைஞர் தனது பகுதியைச் சேர்ந்த 13 பேருடன் பெங்களூரில் இருந்து யஷ்வந்த்பூர்- ஹவுரா ரயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
அவர் சரியாக கடந்த 2ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு ரயிலில் இருந்தபடியே தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, முதல்முறையாக வீடு திரும்பும் நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சாகர்.
இந்த நிலையில் 7 மணியளவில் கோர ரயில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சாகர் கேரியா உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் தர்மநாத் சிங் (19), மற்றும் அமன் ஒன்ராவ் (24) என அடையாளம் காணப்பட்டனர்.
சாகர் கேரியாவுடன் வந்த மீதமுள்ள 11 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதுகுறித்து விசாரிப்பதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு குழு ஒடிசாவுக்கு விரைந்துள்ளது. வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் ரயில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாகர் கெரியாவுக்கு அவரது பெற்றோர், ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது தந்தை தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். வேலைக்குச் சென்ற சாகர் கேரியா, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் பலியான தகவல் அறிந்ததும் அப்பகுதியில் பெரு சோகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications