போலீஸ் ஷூவுக்கு முத்தம்.. கூடவே மாஜி எம்பிக்கு கடும் கண்டனம்.. அதிர வைத்த ஆந்திர எம்பி!
அனந்தப்பூர்: ஆந்திர மாநிலத்தில் போலீஸாரை அவமதித்த தெலுங்கு தேசம் தலைவருக்குப் பதிலடி கொடுக்க, போலீஸ் ஷூவை கையில் எடுத்து முத்தமிட்டு அதிர வைத்துள்ளார் ஒரு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி.
இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. ஷூவுக்கு முத்தமிட்ட அந்த எம்பியின் பெயர் கோரன்ட்லா மாதவ். நேற்று அவர் பிரஸ் மீட் வைத்தார். அப்போதுதான் ஷூவை கையில் பவ்யமாக எடுத்து ,ஷூவை நன்றாக துடைத்து பின்னர் முத்தமிட்டு கீழே வைத்தார். அந்த ஷூவுக்குரிய போலீஸ்காரர் பணியின்போது மரணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்புக்கு விதை போட்டவர் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் ஜேசி திவாகர் ரெட்டிதான். இவர் அனந்தப்பூரில் புதன்கிழமை நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசும்போது, தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், போலீஸாரை எனது ஷூவை முத்தமிட உத்தரவிடுவேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

மாதவ் ஆவேசம்
இது காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதேபோல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி மாதவும் ஆவேசமானார். செய்தியாளர்களை வரவழைத்த அவர் அங்கு வைத்து ரெட்டிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போதுதான் பணியின்போது மரணமடைந்த ஒரு காவலரின் ஷூவை எடுத்து முத்தமிட்டார்.

திவாகர் ரெட்டிக்கு எச்சரிக்கை
பின்னர் அவர் பேசுகையில், திவாகர் ரெட்டி பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து பேசாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. இரவு பகல் பாராமல் போலீஸார் பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் திவாகர் ரெட்டி பேசியிருக்கிறார்.
|
தியாகிகள்
அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் அனந்தப்பூரில் பணியின்போது மரணமடைந்த காவலரின் ஷூவுக்கு நான் முத்தமிட்டேன். மக்களையும், நாட்டையும் காக்க காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்கிறார்கள்.

உத்தரவிட்டால் பதிலடி
எனது கட்சித் தலைமை கட்டளையிட்டால் நான் எம்பி பதவியை துறந்து விட்டு போலீஸில் சேர்ந்து திவாகர் ரெட்டிக்கு சரியான பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறேன் என்று ஆவேசமாக கூறினார் மாதவ்.

இன்ஸ்பெக்டராக இருந்தவர்
உண்மையில் மாதவ், காவல்துறையில் பணியாற்றியவர். கதிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அப்போதே இவரும், ரெட்டியும் கடுமையான வாய்ச் சண்டையில் ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலின்போது தனது பணியை ராஜினாமா செய்து விட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு எம்பி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறிய வாய்
இதற்கிடையே, திவாகர் ரெட்டி, தான் வாய் தவறி அப்படி பேசி விட்டதாகவும், இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். வாய் தவறிப் பேசுவது சகஜம்தான்.. ஆனால் அதற்காக இப்படியா தவறும் அந்த வாய்..!












Click it and Unblock the Notifications