23 நாட்களாக போர்.. உக்கிரமாக தாக்கும் ரஷ்யா..விட்டு கொடுக்காத உக்ரைன்.. இத்தனை போர் வீரர்கள் பலியா?
கீவ் : உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து இருபத்தி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் போரின் காரணமாக ரஷ்ய நாட்டின் 14,000 போர் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ரஷ்யா நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் செவிசாய்க்காததால் போர் தொடர்ந்து வருகிறது.

உக்ரைனில் இனப் படுகொலை
இந்நிலையில் பிரிவினைவாத கிழக்குப் பகுதிகளான லுகான்ஸ்க், டோனட்ஸ்கில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறியும், அதற்குத் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் கடந்த மாதம் 24 ஆம் தேதி இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதாக ரஷ்யா கூறி வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து 23வது நாளாக இந்த போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு
இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கான பீரங்கிகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து சுமார் 14,500 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுத படை கூறியுள்ளது.

ரஷ்ய வீரர்கள்
14,700 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் 93 ரஷ்ய நாட்டின் விமானங்கள், 118 ஹெலிகாப்டர்கள், 450 ரஷ்ய நாட்டின் டாங்கிகள், 1450 கவச வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும், 72 ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் நாற்பத்தி மூன்று விமான எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுடன் இணைந்த ரஷ்ய பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

நேட்டோ அறிக்கை
அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அதிகாரிகள் குழு அளித்துள்ள தகவலின்படி ரஷ்யாவில் தரப்பில் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா நடத்திய கார்கிவ் நகரம் மீதான தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலியானதாகவும் 17 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கிராம்டோர்ஸ்க் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் 2 பேர் பலியானதாகவும் 6 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications