திடீர் வௌ்ளத்தில் சிக்கி 19 பேர் பலி.. பலர் மாயம்! இந்தோனேசியாவில் ஷாக்! மீட்பு பணிகள் தீவிரம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்தோனேசியாவின் வடக்கு மலுகுவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து, நேற்று திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மூழ்கின. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டதால், உடனடியாக மீட்பு பணியை தீவிரப்படுத்த முடியவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி மொத்தம் 19 உடல்கள் மண்ணுக்கடியில் இருந்தும், ஆற்றின் வெள்ளத்திலிருந்தும் மீட்கப்பட்டிருக்கின்றன. 7 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் மீட்பு பணிகளில் கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளூர் மக்கள் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல நிவாரணம் உள்ளிட்ட பணிகளுக்காக அப்பகுதியில் 14 நாட்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுஹரியாண்டோ, சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டுள்ளார். விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் கூறுகையில்,
"வெள்ளம் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள, ருவா கிராமத்தின் பிரதான சாலையை துண்டித்திருக்கிறது. இந்த பகுதிதான் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு ஏராளமான வீடுகள் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கின்றன. இந்த பகுதியில் மீட்பு பணிகளை நாங்கள் நினைத்த வேகத்தில் மேற்கொள்ள முடியவில்லை. மீட்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம்.
அடுத்தடுத்த நாட்களில் இப்பகுதியில் மேலும் மழை தீவிரமடையக்கூடும் என்பதால், நாங்கள் முன்னெச்சரிக்கையுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால், எப்படி தற்காத்துக்கொள்வது? என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது இந்த அளவுக்கு பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications