காசாவில் ரெட் கிராஸ் அலுவலகம் அருகே தாக்குதல்.. 22 பேர் பரிதாப பலி! விதிமுறையை மீறும் இஸ்ரேல்
காசா: காசாவில் உள்ள தங்கள் அலுவலகத்தின் அருகில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் 22 அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் செஞ்சிலுவை சங்கம் (Red cross) தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
இப்படி இருக்கையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், "போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயாராக இருக்கிறோம். போர் நிறுத்தம் என்பது அமெரிக்காவுக்கு உண்மையான சோதனையாகும். அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா? என்பது இப்போது தெரிந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
ஆனால் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயாராக இல்லை என்று கூறி வருகிறது. மட்டுமல்லாது காசா மீதான தனது தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று காசாவில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டிடத்தின் அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த கட்டிடத்தையொட்டி உள்ள இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களில் 22 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தாங்கள் இதுபோன்ற தாக்குதலை நடத்தவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ரெட் கிராஸ் அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தியதன் மூலம் சர்வதேச விதிமுறைகளை இஸ்ரேல் மீறியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications