இந்த சிறுவனுக்கு 27 வயசு.. நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நிஜம்.. ஷாக் தரும் சீனஇளைஞர்!
பார்ப்பதற்கு சிறுவன் போல இருப்பதால், வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறாராம் சீனாவில் இளைஞர் ஒருவர்.
பெய்ஜிங்: வயது 27 ஆன போதும், பார்ப்பதற்கு குழந்தை போன்ற தோற்றத்துடன் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
எப்போதுமே இளமையுடன் இருக்க வேண்டும்.. பிரச்சினைகள் இல்லாமல் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்.. இதுதான் பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும். ஆனால் இப்படி ஒரு வரம் இயற்கையாகவே கிடைத்தும், கடும் வேதனையில் இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
27 வயதாகியும் பார்ப்பதற்கு இன்னமும் சிறுவன் போலவே இருப்பதால், வேலையே கிடைக்கவில்லையாம் இந்த இளைஞருக்கு.

27 வயது இளைஞர்
சம்பந்தப்பட்ட அந்த இளைஞரின் பெயர் மோ ஷென். 27 வயதான அவருக்கு வயதுக்கு ஏற்ற தோற்றம் இல்லை. இப்போதும் பார்ப்பதற்கு சிறுவன் போன்ற தோற்றத்துடனேயே காணப்படுகிறார். இதனால் பல்வேறு பிரச்சினைகளையும் அவர் சந்தித்து வருகிறாராம்.

வேலை கிடைக்கவில்லை
இவரது பள்ளி, கல்லூரி வாழ்க்கை எப்படிச் சென்றது என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் இப்போது 27 வயதாகியும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார் மோ. வேலை தேடிச் செல்லும் இடங்களில் இவரது தோற்றத்தைப் பார்த்து இவருக்கு வேலை தர மறுக்கிறார்களாம். காரணம் சிறுவன் போன்ற தோற்றத்தில் இருப்பதால், இவரை குழந்தைத் தொழிலாளி என நினைத்து யாராவது பிரச்சினை செய்துவிடப் போகிறார்கள் என்ற பயம் தான்.

கவனம் ஈர்த்த வீடியோ
இதனால் சம்பாதித்து தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் கவலையில் உள்ளார் இவர். இவரது ஆதங்கத்தை சோகமாக ஒரு வீடியோவாக சமூகவலைதளத்தில் யாரோ வெளியிட, அது பலரது கவனத்தையும் ஈர்த்து விட்டது. அந்த வீடியோவில் நிஜமாகவே பார்ப்பதற்கு சிறுவன் போல் தான் மோ இருக்கிறார்.

புதிய வேலைவாய்ப்புகள்
இந்த வீடியோ இணையத்தில் அதிக பேரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது அவருக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு, அதில் ஒன்றை மோ தேர்வு செய்து வேலையில் சேர்ந்து விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மோ இப்படி 27 வயதிலும் சிறுவன் போன்ற தோற்றத்தில் இருப்பதற்கான மருத்துவ காரணம் எதுவும் அதில் குறிப்பிடவில்லை.












Click it and Unblock the Notifications