தாலிபான்களிடம் ஆப்கான்: விமான நிலையத்தில் குவிந்த மக்கள்- அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
காபூல்: தாலிபான்கள் கைகளுக்குப் ஆப்கானிஸ்தான் போய்விட்டதால் அந்த நாட்டை விட்டு எப்படியாவது செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அமெரிக்கா பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து இஸ்லாமிய கடும் போக்காளர்களான தாலிபான்கள் அடுத்தடுத்து பல மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
ஆப்கன் அரசு படைகளும் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று தலைநகர் காபூலுக்குள்ளும் நுழைந்தது தாலிபான்கள் படை. ஆப்கான் அதிபர் மாளிகை தொடங்கி அத்தனை இடங்களையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தான் நாடு இப்போது தாலிபான்கள் வசம் போய்விட்டது.

தப்பி ஓடிய அதிபர்
இதனால் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, ஆப்கான் நாட்டைவிட்டு தப்பி வெளியேறிவிட்டார். தாலிபான்கள் கைகள் ஓங்கியதால் கடந்த சில நாட்களாக அந்நாட்டு எம்.பி.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கூண்டோடு நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். தாலிபான்கள் இஸ்லாமிய மத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கடும் போக்கை கடைபிடிப்பார்கள். பெண்கள் கல்வி கற்கவும் தடை விதிப்பது, டிவி, சினிமாக்களுக்கு தடை, ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே நடமாடக் கூடாது என்பது தாலிபான்களின் சட்டம்.

காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்
இதனை மீறினால் மரண தண்டனை கொடுப்பது தாலிபான்கள் வழக்கம். இத்தகைய பழமைவாத ஆட்சியில் அடக்குமுறைகளுடன் வாழ முடியாது என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஏர்போர்ட்டில் பதற்றம்
ரயில், பேருந்துகளில் அடித்து பிடித்துக் கொண்டும ஏறுவதைப் போன்ற நிலைதான் விமானங்களிலும் உள்ளது. விமானங்களைப் பார்த்தாலே மக்கள் ஓடிப் போய் ஏறிக் கொள்கிற காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய காட்சிகள் அங்கூ உச்சகட்ட பதற்றம் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. விமானங்களின் வருகைக்காக காபூல் விமான நிலையத்தையே வாழ்விடமாக மாற்றி அங்கேயே பொதுமக்கள் முகாமிட்டும் வருகின்றனர். இன்னொரு பக்கம் காபூல் விமான நிலையம் எந்த நிமிடமும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குப் போய்விடுமோ என்கிற அச்சம்.

விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி
இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், காபூல் விமான நிலையத்தை நெருங்க கூடாது என தாலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் விமான நிலையப் பகுதிகளில் மோதல்கள் தொடங்கிவிட்டதாக ஒருதரப்பு கூறுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை காபூல் விமானநிலையத்தில் இன்னும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 6,000 பேர் இருக்கின்றனர். காபூல் விமான நிலையத்தில் இயங்கும் அமெரிக்க தூதரகத்துக்கு அவர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்துக்குள் தாலிபான்கள் நுழைந்து அதனை கைப்பற்றினால் மிகப் பெரிய யுத்தம் வெடிக்கும். இதனால் அங்கு குவிந்திருக்கிற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் காபூல் நகரில் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் காபூலில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் அங்கு கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications