ஆசைக்காட்டி மோசம்.. ரஷ்ய ராணுவத்தில் சிக்க வைக்கப்பட்ட இந்தியர்கள்! உடனடியாக மீட்க வேண்டுமென கோரிக்கை
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரனைக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு போர்களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இளைஞர்கள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளனர். இந்த 7 பேரில் 5 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலாவுக்காக சென்றிருக்கின்றனர். ஆனால், பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படி ஏமாற்றி ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் எல்லையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, 23 வயதான ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா, குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்கள் தேவை என்கிற விளம்பரத்தை பார்த்து, ஏஜென்சிகள் மூலம் ராணுவத்தில் சேர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு மாதம் ரூ.2.3 லட்சம் சம்பளம் கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக அவருக்கு ரஷ்ய ராணுவம் சார்பில் துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் கடந்த 21ம் தேதி அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து ரஷ்ய போர்க்களத்தில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில்தான் ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கியிருக்கும் 7 இந்திய இளைஞர்களின் வீடியோ வெளி வந்திருக்கிறது. வீடியோவில் குஜராத்தை சேர்ந்த ககன்தீப், "நாங்கள் இங்கு மிகவும் துயரத்தில் இருக்கிறோம். பதுங்கு குழியில்தான் எங்கள் வாழ்நாட்கள் கழிந்துக்கொண்டிருக்கிறது. எங்களில் யாருக்கும் ரஷ்ய மொழி தெரியாது. எனவே நாங்கள் எப்போது இங்கிருந்து வெளியேற்றப்படுவோம் என்பது குறித்து தெரியவில்லை.
எங்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முறையாக எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அதேநேரம் எங்களிடம் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குகிறார்கள். எனவே உடனடியாக எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இந்திய இளைஞர் ஒருவரின் உயிர் பலியாகியுள்ள நிலையில், மற்றொரு உயிர் பலியாவதற்குள் போர்க்களத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications