ஒரே நொடி.. சொகுசு கார் மோதி 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு.. ஆஸ்திரேலியாவில் இந்திய பெண்ணுக்கு பயங்கரம்
கான்பரா: ஆஸ்திரேலியாவில் நடந்த கோரமான கார் விபத்தில் 33 வயதான இந்தியப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு டெலிவரிக்கு சில வாரங்களே இருந்த நிலையில், இந்தத் துயரம் நடந்துள்ளது. கணவர் மற்றும் 3 வயது மகனுடன் வாக்கிங் சென்றபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் இருந்து பலரும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் இந்தியர்கள் அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகவும் செய்கிறார்கள். அப்படி இந்தியர்கள் அதிகளவில் செல்லும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருக்கிறது.

உயிரிழப்பு
அப்படி அங்கு வசித்து வந்த இந்தியப் பெண் 33 வயதான சாமன்விதா தாரேஷ்வர். அவருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் கருவுற்றார். ஐடி துறையில் வேலை பார்த்து வரும் அவர், சிட்னியில் நடந்த கோரமான கார் விபத்தில் உயிரிழந்தார்.
கடந்த வாரம் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகனுடன் வாக்கிங் சென்றபோது இந்த விபத்து நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்தபோது அவர் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.
என்ன நடந்தது
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், ஹார்ன்ஸ்பி பகுதியில் உள்ள ஜார்ஜ் தெருவில், தாரேஷ்வரும் அவரது குடும்பத்தினரும் வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து அங்கு வந்த கியா கார் வேகத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும், அப்போது பின்னால் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார், கியாவின் பின்பக்கத்தில் மோதி இருக்கிறது. இந்த மோதலின் காரணமாக கியா கார் முன்னோக்கி வேகமாக நகர்ந்தது. அப்போது அது தாரேஷ்வர் மீது மோதியது.
இந்த விபத்தில் தாரேஷ்வருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க முயன்றனர். இருப்பினும், அவரையும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை உள்ளூர் போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
19 வயது டிரைவர்
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி வந்தவர் 19 வயது ஆரோன் பாபசோகுலா என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பயிற்சி ஓட்டுநர் உரிமம் பெற்றவர் என்றும் தெரிகிறது. விபத்தில் கியா மற்றும் பி.எம்.டபிள்யூ கார்களை ஓட்டியவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விபத்தின் போது தாரேஷ்வரின் கணவர் மற்றும் மூன்று வயதுக் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
உயிரிழந்த தாரேஷ்வர் ஆஸ்திரேலியாவில் ஐடி சிஸ்டம் அனாலிஸ்ட்டாக வேலை செய்து வந்திருக்கிறார். அவர் பிஸ்னஸ் அப்ளிகேஷன் மற்றும் சப்போர்ட் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். மேலும், அல்ஸ்கோ யூனிபார்ம்ஸ் நிறுவனத்தில் டெஸ்ட் அனாலிஸ்டாக வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்தது. மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது தரப்பு ஜாமீன் கோரியது. இருப்பினும், ஜாமீனை நிராகரித்து, நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications