பயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா
நைஜீரியா அதிபர் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தவிட மாட்டோம் என பல கிளர்ச்சி அமைப்புகள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.
அபுஜா: நைஜீரியாவில் 2 காவல்நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.
நைஜீரியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுறுத்தும் கிளர்ச்சி அமைப்புகள்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா, கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே அங்கு பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நைஜீரியாவின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தனிநாடு கோரி 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு கிளர்ச்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.

தொடரும் ரத்தப் பலி
இந்த கிளர்ச்சி அமைப்புகள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்தக் கிளர்ச்சி அமைப்புகள் அவைகளுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும். மேலும், தங்கள் பேச்சுக்கு கட்டுப்படாத பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும். இதுபோன்ற தாக்குதல்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெடிகுண்டு வீச்சு
இந்நிலையில், நைஜீரியா அதிபர் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தவிட மாட்டோம் என பல கிளர்ச்சி அமைப்புகள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளன. இந்த சூழலில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாரா மாகாணத்தில் அமைந்துள்ள 2 காவல் நிலையங்கள் மீது மர்மநபர்கள் நேற்று முன்தினம் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

8 போலீஸார் பலி
இந்த பயங்கர தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். காயமடைந்த போலீஸார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பியாப்ரா பழங்குடி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சி அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக நைஜீரியா உளவுத்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
