கின்சல் ஏவுகணைகளை களமிறக்கிய ரஷ்யா..ராணுவத்தில் மீண்டும் சேர வந்த 98 வயது பாட்டி.. உக்ரைன் போர்..!
கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வரும் நிலையில், 98 வயதான உக்ரைன் நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்திருந்த பாட்டி ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட மீண்டும் ராணுவத்தில் சேர முன்வந்துள்ள தகவலை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பெருமையுடன் பகிர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில், பொதுமக்கள் சுமார் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் கோர தாக்குதல் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.

புதிய ஏவுகணைகள்
இந்நிலையில், தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக வெள்ளிக்கிழமை உக்ரைனில் நாட்டின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கை அழிக்க பயன்படுத்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் புதின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும்.

கின்சல் வகை
இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சல் ஏவுகணை ஆகும். இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய நிலத்தடி கிடங்கை அழித்தது" என்று கூறியுள்ளது.

98 வயதான பாட்டி
இந்நிலையில், 98 வயதான உக்ரைன் பாட்டி ரஷியாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார். ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா என்ற 98 வயதான அந்த மூதாட்டி ஒரு சிறந்த போர் வீராங்கனை ஆவார். பல பதக்கங்களை பெற்ற அவர், இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, ஓல்ஹா தனது தாய்நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தில் சேர முன்வந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது.

உக்ரைனின் பெருமை
இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், "இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா 98 வயதான நிலையில் தனது வாழ்க்கையில் 2வது முறையாக போரை எதிர்கொண்டார். அவர் மீண்டும் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருந்தார், ஆனால் எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கீவ்வில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications