வேகமாக அழியும் பூச்சி இனங்கள்.. ஆபத்தில் மனித குலம்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
லண்டன்: உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பூச்சியினங்கள் இருப்பதாகவும், இதில் வெறும் 1 சதவிகித பூச்சியினங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரச்சனை என்னவெனில், இந்த 1 சதவிகித இனங்களில் சுமார் 20% பூச்சிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறியுள்ளனர்.
மனிதனுக்கு தேவையான உணவு உற்பத்தியில் சுமார் 35% பூச்சிகள்தான் உற்பத்தி செய்கின்றன. இப்படி இருக்கையில் பூச்சிகளின் அழிவு மனித இனத்திற்கான அழிவு என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ஜூலாஜிக்கல் சொசைட்டி நிறுவனத்தின் உயிரியல் ஆய்வு பிரிவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருபவர்தான் சார்லட் ஊத்வெய்ட். இவர்தான் இந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமல்லாது தாவரங்களுக்கும் இந்த பூச்சிகளின் தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மகரந்த சேர்க்கையில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் பூச்சிகள் பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்புதான் (IUCN) பூச்சிகள் பற்றி ஆய்வு செய்து, ஆய்வு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வகைகளில் பூச்சிகள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. இதில் வெறும் 1 சதவிகிதம் அதாவது, 12,100 வகை இனங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. என்றும், இதில் 20% பூச்சிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பூச்சிகள் பற்றி ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், ஆசியாவில் பெரியதாக எந்த ஆய்வு தகவல்களும் நம்மிடம் இல்லை. ஆப்பிரிக்காவில் சுத்தம். ஆப்பிரிக்க கண்டத்தில்தான் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கு சுத்தமாக ஆய்வே நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக பூச்சிகளை ஆய்வு செய்து அதை வகைப்படுத்தி, தகவல்களை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.
பூச்சிகள் அழிவில் காலநிலை மாற்றம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, காலநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி தடுக்காவிட்டால் நம்முடைய உணவு உற்பத்தியில் 35 சதவிகிதத்தை இழக்க நேரிடும். இது இந்தியா போன்ற வளரும் நாடுகளைத்தான் முதலில் பாதிக்கும். இன்றைய உலகின் மொத்த மக்கள் தொகை 810 கோடி. இதில் சுமார் 100 கோடி பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். தவிர ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும். உணவு பொருட்களின் விலை தங்கத்திற்கு இணையானதாக இருக்கும்.
இப்படியான பேரழிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், முதலில் பூச்சி இனங்களை பாதுகாக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications