சானியா மிர்சா-சோயிப் விவாகரத்து கன்பார்ம் தானா..ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்
இஸ்லாமாபாத்: சானியா மிர்சா சோயிப் மாலிக் தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், இந்த தம்பதியினர் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அதை முறைப்படி விரைவில் அறிவிப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக்கை மணந்து கொண்டார்.

சானியா மிர்சா- சோயிப் மாலிக்
எல்லை தாண்டிய இந்த காதல் ஜோடிகள் திருமணம் முடிந்தாலும் பரஸ்பரம் தங்கள் நாட்டுக்காக தொடர்ந்து சர்வதேச தொடர்களில் பங்கேற்றனர். துபாயில் வசித்து வரும் நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகள் கொடி கட்டி பறக்கின்றன. இதற்கு சமீபத்தில் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவே முக்கியமாக அமைந்தது.

உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன
சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன... அல்லாவைக் நாடி.." என்று பதிவிட்டு இருந்தார். சோயிப் மாலிக் உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இப்படி மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக சானியா மிர்சாவின் ரசிகர்கள் மத்தியில் கவலை அடைந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் மாலிக், அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.

மகனுடன் மட்டுமே புகைப்படம்
அதேபோல், இந்த ஜோடிகள் ஒன்றாக வசிக்கவில்லை என்றும் தனித்தனியாகவே வசிப்பதாகவும் வதந்திகளுக்கு தீனி போடும் வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சானியா மிர்சாவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடினமான நாள்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு தனது மகன் உடன் இருக்கும் புகைப்படத்தை சானியா மிர்சா வெளியிட்டு இருந்தார்.

புகைப்படங்கள் பதிவிடாமல்..
கடந்த அக்டோபர் மாதம் தங்கள் 4 வயது மகனான இஸ்ஹான் மிர்சாவுக்கு பிறந்த நாளை இந்த நட்சத்திர ஜோடி ஒன்றாக கொண்டாடியது. ஆனாலும் அதன்பிறகு சோயிப் மாலிக் உடன் இருப்பது போன்ற எந்த புகைப்படங்களையும் பதிவிடாமல் சானியா மிர்சா தவித்து வருகிறார். அதேபோல ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், வதந்திகள் பற்றி இதுவரை இருவருமே வாய் திறக்கவில்லை.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில், சோயிப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி விரைவில் தங்கள் விவாகரத்தை வெளிப்படையாக அறிவிக்கப்போவதாக பாகிஸ்தானின் Geo News பரபரப்பு செய்தி வெளியிட்டு இருக்கிறது. சானியா - சோயிப் ஜோடி பல்வேறு ஷோக்களில் ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாலும் சட்ட சிக்கல்கள் காரணமாகவும் வதந்திகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் சட்ட சிக்கல்கள் தீர்ந்த பிறகு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பற்றி அறிவிக்கக் கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications