நம்பிக்கையில்லாதவர்களின் தரகர்... மலாலா நோபல் பரிசுக்கு தேர்வானதற்கு தாலிபன்கள் கண்டனம்
இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காகப் போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர், இந்தாண்டிற்காக நோபல் பரிசுக்கு தேர்வாகி இருப்பதற்கு தாலிபன் இயக்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
பெண் கல்விக்காக போராடியதால் தாலிபன்களால் சுடப்பட்டு உயிருக்குப் போராடியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி மலாலா. சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப் பட்ட மலாலா, தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்கிறார் பாகிஸ்தான் சிறுமி மலாலா.
இதற்கு தாலிபன் இயக்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும், மலாலாவை "நம்பிக்கையில்லாதவர்களின் தரகர்" என்றும் அது விமர்சித்துள்ளது.
தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தா ஜமாத் உல் அஹ்ரார் என்ற தாலிபான் இயக்கம், தனது டுவிட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளது. அதில், நம்பிக்கையில்லாதவர்கள் மலாலாவை பொய்ப் பிரகடனம் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘மலாலா வன்முறைக்கு எதிராகவும், ஆயுதங்கள் ஏந்துவதற்கு எதிராகவும் நிறையப் பேசி வருகிறார். ஆனால் நோபல் பரிசின் நிறுவனர்தான் வெடிப்பொருட்களை கண்டுபிடித்தவர் என்பது அவருக்கு தெரியாதா" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications