பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்
வாஷிங்டன்: பிரேசிலில் ராணுவ ஆட்சிக்கு பிறகு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெற்ற முன்னாள் அதிபருக்கு கிட்டதட்ட 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி இங்கே பார்க்கலாம்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்த நாட்டில் கடந்த 1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை என 2 ஆண்டுகள் பெர்னாண்டோ காலர் டி மெல்லோ (வயது 73) என்பவர் அதிபராக இருந்தார். பிரேசிலில் ராணுவ ஆட்சி நடைபெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமை பெர்னாண்டோ காலர் டி மெல்லோவிற்கு உண்டு.

துணிச்சல் மிக்க அரசியல்வாதியாகவும் இவர் அறியப்பட்டார். பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார்மயம் செய்ய இவர் முயற்சி மேற்கொண்டார். இதனால், மெல்லோவிற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மக்கள் மத்தியில் செல்வாக்காக இருந்த அவருக்கு இந்த முடிவால் செல்வாக்கும் குறைந்தது. அதுபோக பிரேசில் அரசு நடத்தி வந்த பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன் கட்டுமான நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டதில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள், மக்கள் அதிருப்தி எழுந்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து பெர்னாண்டோ மெல்லோவிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டு உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் அவர் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அதாவது, பெர்ணாண்டோவின் வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகள் முறைகேடாக நடைபெற்றதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து பெர்ணாண்டோவிற்கு 8 ஆண்டு 10 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பிரேசில் முன்னாள் அதிபர் பெர்ணானோவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிபரும் செல்வாக்கு மிக்க தலைவராகவும் விளங்கிய பெர்னாண்டோவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications