‛100 மில்லியன் டாலர்'.. காசாவுக்கு உதவும் அமெரிக்கா.. ஜோ பைடனின் அந்த வார்த்தை! கோபமாகும் இஸ்ரேல்?
இஸ்ரேல்: ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்த நிலையில் காசாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலால் காசா மக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கி உள்ளனர். மேலும் எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். தற்போது வரை 10 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காசா நகரில் மின்சாரம், தண்ணீர், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உணவு பற்றாக்குறையும் விரைவில் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் காசா நகரை இஸ்ரேல் படைகள் முற்றுகையிட்டுள்ளதால் அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் கிடைக்காத நிலை உள்ளது.
மேலும் தற்போது வரை போரில் இருதரப்பையும் சேர்த்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் நேற்று முன்தினம் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுதவிர விரைவில் காசா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் போரின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா உதவி செய்ய உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதாவது போருக்கு நடுவே இன்று இஸ்ரேல் சென்ற ஜோ பைடன் அங்கிருந்தே அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் ‛‛காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து, தங்கும் இடம் தேவை உள்ளது. காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொள்ள வேண்டும்'' என அவர் கூறினார்.
மேலும் ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காசா மற்றும் மேற்கு கரைக்கு 100 மில்லியன் டாலர் உதவியை அமெரிக்க வழங்க உள்ளது. இந்த பணம் 1 மில்லியன் (10 லட்சம்) இடம்பெயர்ந்த மற்றும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை ஆதரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த உதவிகள் உங்களிடம் சென்றடையும் வகையில் எங்களிடம் வழிமுறைகள் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கானது. ஹமாஸ் அல்லது தீவிரவாத குழுக்களுக்கு அல்ல.'' என் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இஸ்ரேலை கோபப்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஏனெ்னறால் இஸ்ரேல் தான் காசா நகரை முற்றுகையிட்டு அங்கு உதவி செய்வோரை தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் காசாவை மொத்தமாக கைப்பற்ற இஸ்ரேல் கைப்பற்றும் முனைப்புடன் தான் போரை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு என்பது இஸ்ரேலை கோபப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications