சீனாவில் கோரத்தாண்டவம்.. ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் உருமாற்றம் அடையுமா? நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல்
பெய்ஜிங்: சீனாவில் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இருப்பினும் அதனை அந்நாடு ஒப்புக்கொள்ளாமல் பாதிப்பு, பலியை மறைத்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவில் பரவும் ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் இன்னும் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை தாக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தொற்றுநோய் நிபுணர்கள் ஷாக்கான பதிலளித்துள்ளனர்.
2019ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிபோட்டது. உலகம் முழுவதும் பலகோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக ஏராளமானவர்கள் பலியாகினர். இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது கடந்த 8 மாதமாக கொரோனா பாதிப்பு என்பது குறைய தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் சீனா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது புதிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் பாதிப்பு அதிகரிக்க காரணம்
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது உச்சம் தொட்டுள்ளது. சீனாவில் தற்போது 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இங்கு பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் பூஸ்டர் டோஸை குறைவான மக்கள் தான் செலுத்தி உள்ளனர். மேலும் தற்போது பரவி வரும் பிஎப் 7 வகை ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் மிகவும் வீரியமாக உள்ளது. இதனால் தான் தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்கி வருகிறது. இதனால் தான் சீனாவால் கெரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பிற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல்திறன் மிக குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் மற்றொரு காரணமாகும். இதுதவிர ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸின் இனப்பெருக்க எண் (ஆர்ஓ) 10 முதல் 18 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதித்த ஒருவரால் அதிகபட்சமாக 18 பேருக்கு எளிதாக நோயை பரப்ப முடியும் என கூறப்படுகிறது. இது இன்னொரு காரணமாகும். இந்த ஆர்ஓ எண் டெல்டா, ஓமிக்ரானுக்கு வெறும் 5 முதல் 6 என்ற அளவில் மட்டுமே இருந்தது.

உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் பெரிய சவால் என்பது அது உருமாறி தாக்குவது தான். கடந்த காலங்களில் உலக நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டது இதனால் தான். 2019 இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா அசல் வைரஸ் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகையாக மாறியது. தற்போது சீனாவில் பரவி வருவது மிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான். இது வேகமாக பரவி வருவதால் அந்நாடு திணறி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு இருந்தாலும் கூட அந்நாடு அதுதொடர்பான விபரங்களை வெளியிட மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஒரே நாளில் 3.7 கோடி பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புத்தாண்டு தினத்தில் இந்த பாதிப்பு என்பது இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிஎப் 7 வைரஸ் பாதிப்பு உருமாற வாய்ப்பு
இந்நிலையில் தான் தற்போது சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இது சாத்தியமான நிலையில் தற்போது அந்த பிரச்சனையை உலக நாடுகள் சந்திக்க நேரிடுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி நிபுணர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி சீனாவில் பரவும் கொரோனா ஓமிக்ரான் பிஎப் 7 வகை வைரஸ் வரும் காலத்தில் உருமாறலாம் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டாக்டர் ஸ்டூவர்ட் கேம்ப்பெல் ரே
இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஸ்டூவர்ட் கேம்ப்பெல் ரே கூறுகையில், ‛‛சீனா என்பது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அந்த நாட்டு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக உள்ளது. இதுதான் பிரச்சனையாக உள்ளது. மேலும் இது ஒரு புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் பாதிப்பை உருவாக்கும் அமைப்பாக உள்ளது. ஏனென்றால் முந்தைய காலங்கள் இதனை தான் உணர்த்தியது. ஒவ்வொரு முறையும் பெரிய அலையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வைரஸ் உருமாற்றம் அடைவது தொடர்கிறது. மேலும் கடந்த 6 முதல் 12 மாதங்களில் உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது. இதற்கு தடுப்பூசியும், ஏற்கனவே பாதிக்கப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பு திறனும் தான் காரணமாகும்'' என்றார்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைவு
மேலும் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வைரஸ்கள் குறித்து படிக்கும் டாக்டர் ஷான் லு லியு கூறுகையில், ‛‛சீனாவில் தற்போது பல ஓமிக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒன்று தான் பிஎப் 7 வைரஸ் வகை. இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதில் வீரியமாக உள்ளது. இதுதான் அங்கு கொரோனா பாதிப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.'' என்றார்.

எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்
மேலும் நிபுணர்கள் கூறுகையில், ‛‛சீனாவில் தற்போது பரவும் வைரஸ் இன்னும் உருமாறுமா, இல்லையா என்பதை இப்போது உடனடியாக கூறிவிட முடியாது. ஆனால் அது நடக்கலாம். இவ்வாறு உருமாறும் கொரோனா வைரஸ் இதுவரை பரவிய வைரஸ்களின் கலவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம். இதனால் புதிய உருமாற்றம் என்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி கூற முடியாது'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications