இரண்டாம் உலகப்போரின் குண்டு! 78 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிப்பு.. 13,000 பேரை வெளியேற்றிய ஜெர்மனி
பெர்லின்: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய குண்டு ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த 13 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப்போர் இந்த நவீன உலகம் சந்தித்ததில் மிக மோசனமான விஷயங்களில் ஒன்றாகும். இந்த போரில் ஒட்டுமொத்தமாக சுமார் 5 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் அதிக உயிரிழப்பு சோவியத் ரஷ்யாவுக்குதான் ஏற்பட்டது. ஆனால் இந்த போரை தொடங்கியது ரஷ்யா கிடையாது. ஜெர்மனிதான் இப்போருக்கு அடித்தளமிட்டது. அவர்கள் சோவியத் ரஷ்யாவை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் முன்னேறி வந்தனர்.

ஜெர்மனியுடன் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் சேர்ந்துக்கொண்டது. இப்படி இருக்கையில் ஒருபுறம் சோவியத் ரஷ்யாவும், மறுபுறம் அமெரிக்காவும் இந்த இரு நாடுகளை எதிர்த்தன. ஆனால் இரு நாடுகளின் போர் புரியும் முறையும் வித்தியாசமாக இருந்தது. அப்போதைய ரஷ்யாவின் அதிபரான ஸ்டாலின் ஜெர்மனி வீரர்களை முன்னேறவிட்டு அடிப்பார். ஆனால் அமெரிக்கா அப்படியல்ல. எடுத்தவுடன் எதிரி நாட்டின் மீது குண்டு மழை பொழிந்துவிடும்.
அப்படி போடப்பட்ட குண்டுகளில் பல ஜெர்மனியில் வெடிக்காமல் மண்ணில் புதைந்திருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜெர்மனி மறு கட்டமைப்புக்குள் சென்றதால் இந்த குண்டுகள் அப்படியே பூமிக்கு அடியில் புதைந்துவிட்டன. இவ்வாறு புதைந்த குண்டுகள், புதிய கட்டிடங்களை கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைக்கும். இப்படிதான் ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் எனும் நகரத்தில் உள்ள ஓர் மிருககாட்சி சாலையில் நேற்று ஒரு வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு டன் எடையிருக்கும் இந்த வெடி குண்டு கடந்த 78 ஆண்டுகளாக வெடிக்காமல் இங்கேயே இருந்திருக்கிறது. இதேபோல கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் முன்னர் 2017ம் ஆண்டு மற்றொரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அவையெல்லாம் பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த குண்டையும் அப்புறப்படுத்தும் பணியை அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக இந்த குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், "சுமார் 13,000 பேர் இங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த குண்டை இங்கேயே வெடிக்க வைக்க முடியுமா? அல்லது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா? என்பது குறித்தும் நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது இங்கிருந்து வெளியேறுபவர்கள் தங்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை சரியாக பூட்டிவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை குண்டு இங்கேயே வெடித்துவிட்டால் அதனால் ஏற்படும் புகை தூசி வீட்டிற்குள் போய்விடக்கூடாது என்பதால்தான் இந்த ஏற்பாடு" என்று விளக்கமளித்துள்ளார். குண்டை அப்புறப்படுத்தும் செயல்முறை எப்போது முடியும் என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை.












Click it and Unblock the Notifications