குலுங்கியது அசாம்.. வடகிழக்கு இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறியடித்த மக்கள்
கவுகாத்தி: அசாம் (Assam Earthquake) தலைநகர் கவுகாத்தியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வடக்கு பெங்கால் மற்றும் அண்டை நாடான பூடானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று மாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

கவுகாத்தியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு பெங்கால் மற்றும் அண்டை நாடான பூடானிலும் உணரப்பட்டது. அசாமின் உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. அசாமில் கடந்த 2 ஆம் தேதி சோனிட்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
இந்த லேசான நிலநடுக்கம் அங்கு பெரிதும் உணரப்படாவிட்டாலும் அடுத்த 10 நாட்களில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்டு இருக்க கூடிய இந்த நிலநடுக்கம் ஏதேனும் பெரிய அளவிலான நிலநடுக்கத்திற்கான முன்னோட்டமா என்று கூட அசாம் மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
முன்னதாக தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இறுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அங்குள்ள குனார் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மண் வீடுகள் இடிந்து இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications