ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது நடந்த தாக்குதல்! ஈரான் தூதர் கொடுத்த ரியாக்ஷன்
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவ கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியாவும் கடும் கண்டங்களை தெரிவித்த நிலையில் ஈரான் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா - ஈரான் இடையேயான உறவு வலுவாக உள்ளது. எனினும், இந்த பிரச்சினை (கப்பல்கள் மீதான தாக்குதல்) விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக ஈரான் தூதர் அப்துல் மஜித் ஹகீம் இலாஹி கூறியுள்ளார்.
ஈரான் அமெரிக்கா போரில் சற்று அமைதி ஏற்பட்ட நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் கூறியிருந்தது. இதையடுத்து கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லத் தொடங்கின. இதற்கிடையே அமெரிக்க கடற்படை தொடர்ந்து ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு வந்ததால் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி மீண்டும் ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது.

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்
உடனடியாக அந்த வழியாக கப்பல்கள் போக்குவரத்தையும் தடுத்தது. மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ராணுவத்தின் இந்த அதிரடியில் நேற்று இந்திய கப்பல்கள் சில சிக்கிக்கொண்டன. ஹார்முஸ் ஜலசந்தி நேற்று முன் தினம் திறக்கப்பட்டிருந்ததினால் பல்வேறு வகையான சரக்குகளுடன் 14 கப்பல்கள் இந்தியாவை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தன. இதில் 7 கப்பல்கள் இந்திய கொடியுடனும், 4 கப்பல்கள் லைபீரியா கொடியுடனும், 2 கப்பல்கள் மார்ஷல் தீவு கொடியுடனும் வந்து கொண்டிருந்தன.
இந்த கப்பல்களில் கச்சா எண்ணெய், சமையல் கியாஸ், உரம் என இருந்தன. இந்த கப்பல்கள் வந்துகொண்டிருந்த போது ஈரான் புட்சிகர காவல் படைக்கு சொந்தமான 2 படகுகள் திடீரென அங்கு வந்து கப்பல்களை வழிமறித்து தாக்குதல் நடத்தின. மேலும் சிறிய ரக ஏவுகணையும் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. சில கப்பலில் கன்டெய்னர்கள் சேதமடைந்தன. எனினும் அதில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதையடுத்து அந்த கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.
கண்டனம் தெரிவித்த இந்தியா
ஒரு கப்பலை தவிர்த்து மற்ற அனைத்தும் நீரிணையை கடக்காமல் திரும்பிச்சென்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் வந்த இரண்டு கப்பல்களை ஈரான் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா உடனடியாக ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த நிலையில், ஈரான் உச்ச தலைவருக்கான இந்தியாவின் பிரதிநிதி இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் தூதர் விளக்கம்
இந்தியாவுக்கான ஈரான் தூதர் அப்துல் மஜித் ஹகீம் இலாஹி கூறுகையில், "அதுபோன்ற ஒரு விஷயம் குறித்து எனக்கு தெரியாது. எனினும், இந்தியா -ஈரான் இடையேயான உறவு வலுவாக உள்ளது. எனினும், இந்த பிரச்சினை (கப்பல்கள் மீதான தாக்குதல்) விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். ஈரான் போருக்கு ஆதரவாக இல்லை.
அமைதியையே விரும்புகிறது. இந்தியா - ஈரான் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கலாசாரம், நாகரீகம், கல்வி, மனிதாபிமானம், தத்துவம் என பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் தொடர்பு உள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவு வலுவாக உள்ளது. இன்னும் வலுவாகவே வளரும்" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications